Wednesday, March 06, 2013
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் அகதி அந்தஸ்து கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளது.
இருந்தபோதும், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையிலிருந்து தமது நாட்டிற்குள் படகுகள் மூலம் புகலிடம் கோரி வருபவர்கள் தொடர்பாக அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கையில் உள்நாட்டு ஊடகங்கள் மூலம் அறிவித்தல்களை விடுத்திருந்தது.
தமது நாட்டில் தொழில் வாய்ப்புகள் இல்லை என்றும், பெரும்பாலும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புதல் மற்றும் விசேட கவனிப்புகள் எதுவும் வழங்கப்படமாட்டாது என்று அந்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியா குடிவரவு மறறும் குடியுரிமைகள் அமைச்சர் பிரெண்டன் ஒ கொணர் விடுத்துள்ள செய்தியுடன் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
மிகவும் நியாயமான காரணமின்றி எவருக்கும் புகலிடம் வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானவர்கள் இலங்கைக்கு பயணிக்கும் அடுத்த விமானத்திலே திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
புகலிடம் பெற நியாயமான காரணங்கள் இல்லையேல் துரிதமாக திருப்பி அனுப்பி வைக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தருணங்களில் நிதியோ அல்லது வேறு எந்தவொரு உதவிகளும் வழங்கப்படமாட்டாது என்று அந்த செய்தியில் அவுஸ்திரேலியா குடிவரவு மற்றும் குடியுரிமைகள் அமைச்சர் பிரெண்டன் ஒ கொணர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment