Wednesday, March 13, 2013

எதிர்பார்த்தபடி செயல்படாததால் "நிர்பய்' ஏவுகணை நடுவானில் தகர்ப்பு!

Wednesday, March 13, 2013
பாலாசோர்::முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நடுத்தர ரக ஏவுகணையான, "நிர்பய்' நேற்று சோதிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி செயல்படாததால், இந்த ஏவுகணை, நடுவழியில்

தகர்க்கப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான, டி.ஆர்.டி.ஓ.,வின் துணை நிறுவனமான, பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும், ஏரோனாடிகல் மேம்பாட்டு அமைப்பு, இந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. தரை, கடல், வானில் இருந்து ஏவப்படக் கூடிய இந்த ஏவுகணை, நேற்று காலை, 11:54 மணிக்கு, ஒடிசாவின், சந்திப்பூர் பகுதியை ஒட்டியுள்ள கடலில் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.

"நிர்பய்' என்றால், அச்சமற்றது என, பொருள். இந்த அதிநவீன ஏவுகணை, எதிரியின் கண்களுக்கு தெரியாமல், போக்கு காட்டி, குறிப்பிட்ட இலக்கை, குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்தது.

நடுத்தர ரக, நிர்பய் ஏவுகணை சோதனை நடத்தப்படுவது, இதுவே முதல் முறை என, டி.ஆர்.டி.ஓ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், சில தொழில்நுட்ப இலக்குகளை இந்த சோதனை எட்டவில்லை என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, டி.ஆர்.டி.ஓ., வெளியிட்ட அறிக்கையில், "மிக சரியாக புறப்பட்டுச் சென்ற நிர்பய், பறக்கும் போது, நிர்ணயித்த படி செயல்படாததால், அதை, நடுவழியிலேயே தகர்த்து விட்டோம். இது ஒரு விதத்தில் தோல்வி தான். எனினும், இது தான் முதற்கட்ட சோதனை. எதற்காக சோதனை நடத்தினோமோ, அதில் வெற்றி பெற்று விட்டோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்பய் ஏவுகணை, மரத்தை தொட்டு செல்வது போன்ற குறைந்த உயரத்தில் பறக்கக் கூடியது. அதனால், ரேடார் கண்களுக்கு தட்டுப்படாது.

அணு குண்டுகளை சுமந்து, 700 கி.மீ., தூரம் வரை செல்லும் திறன் படைத்தது. கிளம்பும் போது ஏவுகணை போல கிளம்பி, பறக்கும் போது, விமானம் போல மாறி, குறிப்பிட்ட இலக்கை நோக்கி செல்லும் இந்த ஏவுகணை, அமெரிக்காவின், "டொமஹாக்' பாகிஸ்தானின், "பாபர்' ஏவுகணைகளுக்கு சமமானது என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment