Sunday, March 10, 2013

இந்தியால் அடிபட்ட "டெசோ'!!

Sunday, March 10, 2013
புதுடில்லி::டில்லி "டெசோ' கூட்டத்திற்கு, வட இந்திய கட்சித் தலைவர்களை, தி.மு.க.,வினர் அழைத்த விதமே வினோதம். பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில், அந்த சீனியர் தி.மு.க., எம்.பி., மற்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முலாயம் சிங்கிடம், அவர் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். முலாயம் சிங்கிற்கும், ஆங்கிலத்துக்கும் எவ்வளவு தூரம் என்பது, அனைவருக்கும் தெரியும். தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், இலங்கை தமிழர்கள் குறித்து, தி.மு.க., எம்.பி., சொல்ல எஸ்.எஸ்., என்று மட்டும் சொன்னார் முலாயம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த, அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன் உடனே, முலாயம் சிங்கிடம் சென்று இந்தியில் பேசினார். 2009ல் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, தி.மு.க., மத்திய அரசில் என்ன செய்துகொண்டிருந்தது என்பதை அவரிடம் விளக்கினார். விவகாரத்தை புரிந்து கொண்ட முலாயம், "டெசோ கூட்டத்திற்கு போக மாட்டேன்' என்றாராம்.

அடுத்து தி.மு.க., எம்.பி., சந்தித்தது ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவை. உடனே, மைத்ரேயன் அவரையும் சந்தித்து, இந்தியில் விளக்கினார். அவரும் விஷயத்தை புரிந்து கொண்டு, "பார்லிமென்டில் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம், டெசோ கூட்டத்திற்கு போக மாட்டோம்' என்று கறாராக சொல்லிவிட்டார் யாதவ்.

இத்தோடு விஷயம் முடிந்து விடவில்லை. டெசோ கூட்டத்தில் கலந்து கொள்ள அத்வானி விருப்பப்பட்டார். மைத்ரேயன், அத்வானி கலந்து கொள்வதையும் தடுத்துவிட்டார்.

இந்தி படிக்கக்கூடாது என்று எதிர்த்த தி.மு.க.,விற்கு, இப்போது அந்த இந்தியே ஆப்பு வைத்துவிட்டது.

பா.ஜ., குஷி

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்றாலும், இப்போதிருந்தே தேர்தல் பரபரப்பு டில்லியில் துவங்கிவிட்டது. பலவித ஊழல் புகார்களில் சிக்கியுள்ள காங்கிரஸ், மீண்டும் ஆட்சிக்கு வருமா என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பா.ஜ., எப்படி ஆட்சியைப் பிடிக்கும். தனிக்கட்சியாக கூட அவர்களால் வர முடியாது. கூட்டணி வைத்தாலும் கஷ்டம் தான் என்று பேசப்படுகிறது.

ஆனால், பா.ஜ.,விற்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில், ஒரு விஷயம் நடந்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து அரசியல் குழுக்கள் பா.ஜ., தலைவர்களை சந்தித்து வருகின்றன. இது, ஒரு பொதுவான வழக்கம் என்றாலும், பல நாடுகளிலிருந்து பிரமுகர்கள் பா.ஜ.,வை சந்திப்பது, அக்கட்சிக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா, ஜப்பான், சவுதி அரேபியா, ஐரோப்பிய நாடுகளில் ஆட்சியில் உள்ள கட்சி பிரமுகர்கள் குழு, சமீபத்தில் பா.ஜ., தலைவர்களை சந்தித்தது. பா.ஜ.,வின் வெளிநாட்டுக்கொள்கை, பொருளாதார சீர்திருத்தக் கொள்கை என, பல விவகாரங்களில் பா.ஜ., எப்படி செயல்படப்போகிறது என்று, இந்த குழுவினர் கேட்டு அறிந்து கொண்டனர்.

"இப்படி, வெளிநாட்டு குழுக்கள் எங்களை சந்திப்பதிலிருந்தே, நாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்பதை வெளிநாட்டினர் உணர்ந்துவிட்டனர்' என்று, சந்தோஷப்படுகின்றனர்.

டில்லி "டெசோ' புஸ் ஏன்?

டில்லியில் தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட, "டெசோ' கூட்டத்திற்கு பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டில்லி ஆங்கில தினசரிகளில் விளம்பரம் தரப்பட்டிருந்தது. இதற்காக ஸ்டாலின், வீரமணி ஆகியோர், சென்னையிலிருந்து வந்திருந்தனர். காங்கிரஸ், பா.ஜ., கட்சி, அகாலி தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட பல கட்சி தலைவர்கள் அமர்வதற்காக பெயர் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் காத்திருந்த பின், அமைச்சர் குலாம் நபி ஆசாத், ஞான தேசிகன் சுதர்சன நாச்சியப்பன், சித்தன் ஆகியோர் வர, தி.மு.க.,வினர் குஷியானார்கள். தேசியவாத காங்கிரசிலிருந்து வந்த பவாரின் மகள் சுப்ரியா சுலே, ஐந்து நிமிடத்திலேயே கிளம்பிவிட்டார். தேசிய மாநாடு கட்சியிலிருந்து, ஒரு பிரதிநிதி வந்திருந்தார். மற்ற கட்சிகள் வரவேயில்லை.

காலியாக இருந்த இடங்களில், தி.மு.க., எம்.பி.,க்கள் அனைவரும் அமர்ந்து கூட்டத்தை ஒப்பேற்றினர். மீடியாக்கள் வெளியே செல்லுங்கள் என்று பாலு கட்டளையிட, பத்திரிகையாளர்கள் வெறுத்துப் போனார்கள்.

தீர்மானம் பற்றி தி.மு.க.,வினர் பேச்சு எழுப்ப, அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று குலாம் நபி ஆசாத் சொல்ல, அமைதியானது தி.மு.க.,

ஸ்டாலினை அழைத்து, டில்லியில் பெரிதாக செய்ய நினைத்தோம்; கடைசியில் இப்படி ப்ளாப் ஆகிவிட்டது என்று, தி.மு.க.,வினர் வருத்தப்பட்டனர்.

No comments:

Post a Comment