புதுடில்லி::எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் இந்தியா தலையிடாது. தரகர்கள் போல, இருதரப்பினரிடமும் பேச இந்தியா தயாராக இல்லை,'' என, வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார்."ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்ற, கோரிக்கை வலுத்துள்ள நிலையில், மத்திய அரசு, தன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்காமல் உள்ளது. இலங்கை தமிழர் விவகாரத்தில், நேரடியாக பதில் கூறினால், தி.மு.க., போன்ற கட்சிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், குழப்பமாகவே தொடர்ந்து பேசி வருகிறது.இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த, ஆசியா, பசிபிக் பகுதிகளுக்கான, சர்வதேச வர்த்தக அமைப்பு மாநாட்டில், அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறியதாவது:இந்தியா முழு வளர்ச்சி அடைந்த நாடு; இன்னும் வளர்ச்சி அடைந்து வருகிறது. எவ்வித தயக்கமும் இன்றி, உலகின் விலகிப்போன, இரு நாடுகளுடன் சமகாலத்தில் பேசும் வாய்ப்பை பெற்ற நாடு.அதற்காக, இரு வேறு கருத்து கொண்டவர்களிடம், ஒரே நேரத்தில் பேச்சு நடத்த தயாராக இல்லை. தரகர்கள் போல, இரு தரப்பினரிடம் பேச விரும்பவில்லை.பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட நாங்கள் தயாராக இல்லை.
இந்தியா மென்மையான, எளிதில் ஏற்கும் படியான கருத்துகளை கொண்ட நாடு என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர். உலகின் போலீஸ் நாடாக விளங்க, இந்தியா எப்போதும் தயாராக இருந்ததில்லை.சீனாவுடனான வர்த்தக போட்டியிலிருந்து, இந்தியா வெட்கி விலகாது. ஆரோக்கியமான போட்டியை நாம் ஆதரிக்கிறோம். அந்நாட்டின் பிரமாண்ட பலத்தை மதிக்கிறோம். நமது கொள்கைகள் மற்றும் பொருளாதார திட்டமிடலில், அந்த அம்சத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.நிதியமைச்சர், சிதம்பரம் அருமையான பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார்; யாரும் அதில் எக்குறையும் சொல்ல முடியாது. எப்போதும் கவர்ச்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டே இருக்க முடியாது.லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. முன்கூட்டியே தேர்தல் வராது; மீண்டும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.இவ்வாறு, குர்ஷித் குழப்பமாக பேசினார்.அவரின் பேச்சில், "இலங்கை' என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்றாலும், இப்போதைய நிலையில், இந்த நிலைப்பாடு தான், இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நிலை என்பது மட்டும் மறைமுகமாக தெரிய வருவதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

No comments:
Post a Comment