Pages

Friday, March 1, 2013

இலங்கை சிறையில் இருந்த தமிழக கைதிகள் விடுவிப்பு!

Friday, March 01, 2013
சென்னை::தமிழக வியாபாரிகள் இலங்கைக்கு சென்று பொருட்களை விற்பனை செய்துவருவது வழக்கம். அதுபோல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு சென்ற வியாபாரிகளை இலங்கை அதிகாரிகள் பிடித்து கஞ்சா போன்ற போதை பொருள்களை கடத்தி வந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டி இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றத்தில் இவர்களில் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு 10 ஆண்டுக்கும் அதிகமான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் 8 பேர் ராமநாதபுரம், 2 பேர் தஞ்சாவூர், 2 பேர் தேனி, ஒருவர் நாமக்கல், மற்றொருவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள். இவர்கள் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்த சிங்கள கைதிகள் தமிழக வியாபாரிகள் 14 பேரையும் அடித்து உதைத்து துன்புறுத்தினர்.

தகவலறிந்த 14 பேரின் குடும்பத்தினரும் தமிழக அரசிடம், அவர்களை சிறையில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழக அரசு மத்திய அரசின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்தது. இதை தொடர்ந்து கைதிகள் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் 14 பேரையும் இலங்கை அரசு விடுவித்தது.

இவர்களை சென்னைக்கு கொண்டு வரும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் 28 பேர் கொழும்பு சென்றனர். இதன்படி முதற்கட்டமாக ராமநாதபுரத்தை சேர்ந்த சையது கரீம் (35), பழனியப்பன் உதயகுமார் (37) ஆகிய 2 பேர் நேற்று இரவு 8 மணிக்கு சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்போடு இவர்கள் புழல் சிறைக்கு கொண்டுசென்று அடைக்கப்பட்டனர். மீதம் உள்ளவர்கள் நாளை (2ம் தேதி) இரவு வரை 7 விமானங்களில் இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றனர். இதுபற்றி சிறைத்துறை டி.ஐ.ஜி மவுரியா நிருபர்களிடம் கூறுகையில், கைதிகள் அனைவரும் ராமநாதபுரம், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர்களாதலால் அவர்களை புழல் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற முடிவுசெய்துள்ளோம். திருச்சி சிறையில் இருந்தால் அவர்கள் குடும்பத்தினர் சென்று பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment