Monday, March 18, 2013

தி.மு.க., மிரட்டலுக்கு முடிவு காண நாளை... ஆலோசனை! காங்., எம்.பி.,க்களுடன் சோனியா சந்திப்பு!

Monday, March 18, 2013
புதுடில்லி::இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது' என, தி.மு.க., மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, இதுகுறித்து, காங்., - எம்.பி.,க்களுடன், அக்கட்சித் தலைவர் சோனியா, நாளை, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த முடிவை, அவர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விலகுவதாக மிரட்டல்

 புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவம், பெருமளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது."இந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். இல்லையெனில், மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலக நேரிடும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மிரட்டல் விடுத்துள்ளார். எனினும், இது தொடர்பாக, மத்திய அரசிடமிருந்து, உறுதியான பதில் எதுவும் வரவில்லை.இதனால், அதிருப்தி அடைந்த அவர், "இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது' என, நேற்றும் மிரட்டல் விடுத்தார்.

திடீரென நெருக்கடி

இதையடுத்து, இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம், நாளை நடக்கிறது. இதில், இலங்கை விவகாரம் குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன், சோனியா, கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளார்.இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

காங்., - எம்.பி.,க்கள் கூட்டம், நாளை நடக்கிறது. இதில், இலங்கை விவகாரம், ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு, இத்தாலி கடற்படை வீரர்கள் விவகாரம் ஆகியவை குறித்து,

முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.குறிப்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தி.மு.க., இலங்கைத் தமிழர்விவகாரத்தில், மத்திய அரசுக்கு திடீரென நெருக்கடி கொடுத்து வருவதால், இது தொடர்பான விவாதம், நாளைய கூட்டத்தில், முக்கிய பங்கு வகிக்கும்.இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது பற்றியும், தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றியும், எம்.பி.,க்களிடம், காங்., தலைவர் சோனியா, கருத்து கேட்கவுள்ளார்.இலங்கைத் தமிழர் விவகாரத்தில், தி.மு.க., மிரட்டல் விடுத்தாலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால், மத்திய அரசுக்கு, உடனடியாக எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

அவசரம் இல்லை: குர்ஷீத்

ஆனாலும், ஐ.மு., கூட்டணியில், நீண்ட காலமாக, தி.மு.க., அங்கம் வகிப்பதால், அதன் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதனால், இலங்கைத் தமிழர் விவகாரத்தில், மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு குறித்து, நாளைய கூட்டத்தில் விரிவான ஆலோசனையை நடத்தி, அன்றைக்கே அதுகுறித்த முடிவை, சோனியா அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.உத்தர பிரதேசத்தில், வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறியதாவது:இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும்

தீர்மானத்தில், என்ன நிலையை மேற்கொள்வது என, கூட்டணி கட்சிகளுடன், ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, தி.மு.க.,வுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. இதற்கு பிறகே, இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.இதற்கிடையே, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், கடந்த, 15ம் தேதி, இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்' எனக் கூறிய, இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், "தமிழர் மீள் குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மனித உரிமை மீறல் குறித்து, நம்பத் தகுந்த விசாரணை நடத்த வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து, ராணுவத்தினரை, படிப்படியாக வாபஸ் பெற வேண்டும்' என்றும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment