Pages

Thursday, March 7, 2013

11ம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட் : சொத்து வரி, தொழில் வரி உயருகிறது!

Thursday, March 07, 2013
சென்னை::சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 11ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மாநகராட்சி 155 வார்டுகளாக இருந்தது. அதன் பின்னர், 200 வார்டுகளாக தரம் உயர்த்தப்பட்டு சென்னையை சுற்றியிருந்த 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. இதை தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது. மேயராக சைதை துரைசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் முதல் பட்ஜெட் கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2921.48 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சாலை மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 20132014ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் வரும் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆணையாளர் விக்ரம் கபூர் தலைமை வகிக்கிறார்.

துணை மேயர் பெஞ்சமின் முன்னிலை வகிக்கிறார். பட்ஜெட்டை நிதி நிலைக்குழு தலைவர் சே.சந்தானம் தாக்கல் செய்கிறார். மேயர் சைதை துரைசாமி, பட்ஜெட் உரை நிகழ்த்துகிறார். அதைத் தொடர்ந்து, அன்றைய தினமே பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் நிதி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.3,500 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் வகையில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவில் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் கல்விக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதற்காக, அதிக நிதி ஓதுக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையில் பாலங்கள் அமைப்பதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சொத்துவரி, தொழில் வரியும் உயரக்கூடும் என்று தெரிகிறது. மேலும், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, சென்னைக்கு இணையான சாலைகள், மின் விளக்குகள் அமைப்பது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. பட்ஜெட் குறித்து மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகளுடன் மேயர் சைதை துரைசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment