Pages

Monday, February 18, 2013

வாகரைப் பிரதேசத்தில் புனர்வாழ்வு பெறாத புலி உறுப்பினர்கள் மூன்று பேர் கைது!

Monday, February 18, 2013
இலங்கை::வாகரைப் பிரதேசத்தில் புலிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தம்மிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் தெரிவித்ததுள்ளது.

வாகரை பகுதியில் ஒருவரும் மாங்கேணி பகுதியில் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தம்மிடம் முறையிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் இ.மனோகரன் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையங்கள் ஊடாக இவர்கள் கைதுசெய்யப்படாமல் பொலிஸ் காவலரண்கள் ஊடாக கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் குடும்பத்தினருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாகவே படிவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கொழும்பு முகவரியிடப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வு பெறாத நிலையில் உள்ள புலி உறுப்பினர்களை கைதுசெய்து புனர்வாழ்வுக்குட்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின்போது இதுவரையில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வாழைச்சேனை, கதிரவெளி, மாங்கேணி, நாயன்கேணி, மண்டூர் ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்ட முன்னாள்  புலி உறுப்பினர்களே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகத்துடன் இணையாத நிலையில் உள்ளவர்களே கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான பணிகளே முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பில் யாரும் அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment