Saturday, February 16, 2013

இலங்கை அரசில் அங்கத்துவம் வகிக்கின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே யுத்தத்தினால் சிதைந்து போன எமது தேசத்திற்கு புத்துயிர் அளிக்க முடியும் - நாக தமிழேந்திரன்!




Saturday, February 16, 2013
இலங்கை::இலங்கை அரசில் அங்கத்துவம் வகிக்கின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே யுத்தத்தினால் சிதைந்து போன எமது தேசத்திற்கு புத்துயிர் அளிக்க முடியுமென யாழ்.மத்திய கல்லூரியின் முத்தமிழ் விழா பொறுப்பாசிரியர் நாக தமிழேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.மத்திய கல்லூரியினால் இன்றைய தினம் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த யுத்த காலங்களின் போது எமது பகுதியில் கலை, கலாசாரம் மட்டுமல்லாது கல்வியும் சிதைந்து போயிருந்த நிலையில் தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

இதனிடையே பாரம்பரிய கலைகள் இழக்கப்பட்டு தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாடுகளும் அழியும் தருவாயில் உள்ளமை இங்கு வேதனையளிக்கின்றது. குறிப்பாக பாடசாலைகளில் விளையாட்டுத்துறைக்கு அளிக்கப்படும் கௌரவம் கலைத்துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்காக இவ்வாறான முத்தமிழ் தொடர்பான போட்டிகளும் நடாத்தப்பட வேண்டும்.

அந்தவகையில் இது போன்ற முத்தமிழ் விழாக்களை நடாத்துவதற்கு அமைச்சர் அவர்களும், கல்வித்துறைசார்ந்த அதிகாரிகளும் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அவர், இலங்கை அரசில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பழைய மாணவர் என்பதற்கு மேலாக இக்கல்லூரியின் சூரியனும் அவரே என்றும், அவரால் எமது பாடசாலை பெருமையடைகின்றது என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கல்லூரி அதிபர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பதாக பிரதான வாயிலில் மங்கள வாத்தியம் சகிதம் அமைச்சர் அவர்கள் வரவேற்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. மண்டபத்தில் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் கல்விச் சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இன்றைய நிகழ்வில் மங்கள இசை வழங்கிய கலைஞர்களுக்கு அமைச்சர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

தொடர்ந்து மத்திய கல்லூரி ஆசிரியரும், முத்தமிழ் விழா இணைப்பாளருமான திருஞானசம்பந்தர் உரையாற்றியதைத் தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் மற்றும் விரிவுரையாளர்களினதும் ஆக்கங்களைத் தாங்கி �மகிழம்� சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதில் முதற் பிரதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டு வைத்தார். நூலின் நயப்புரையை வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விஜயசுந்தரன் நிகழ்த்தினார்.

இதனிடையே கல்லூரி மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் சாதித்த மாணவ செல்வங்களுக்கு அமைச்சர் அவர்கள் பொற்கிழி வழங்கி கௌரவித்ததுடன், பல்வேறு கலைநிகழ்வில் பங்கெடுத்த மாணவ மாணவிகளுக்கும் இதன்போது சான்றிதழ்களும், அமைச்சர் அவர்களது சார்பில் சிறப்புப் பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செல்வராஜா, தமிழர் ஆசிரியர் சங்கச் செயலாளர் சடா புவனேஸ்வரன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா,; மதத்தலைவர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

No comments:

Post a Comment