Monday, February 18, 2013

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள அரச காணிகள் தொடர்பில் தகவல் ஆராயும் நடவடிக்கை: வடக்கு, கிழக்கு உயர் பாதுகாப்பு வலய காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு!

Monday, February 18, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள அரச காணிகள் தொடர்பில் தகவல் ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி அரச காணிகளில் வசித்துவரும் தமிழ் மக்களை வேறொரு பிரதேசத்தில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஒவ்வொரு பிரதேச சபை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் படி இந்நடைமுறை செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

தமது சொந்த இடங்களில் மக்களை மீள் குடியேற்றம் செய்யுமாறு எதிர்க் கட்சிகளின் கூட்டணி கடந்தவாரம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.

இதற்கான ஒரு அறிவிப்பாகவே காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

யுத்த காலத்தில் சம்பூர் மற்றும் பலாலி பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவ காவலரங்கள் அமைக்கப்பட்டன.

இப்பிரதேசங்கள் தற்போதும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

இராணுவ காவலரண்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மட்டுமல்ல எனவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இராணுவ காவலரங்கள் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment