Saturday, February 16, 2013
சென்னை::கர்நாடகாவில் இருக்கும் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்காக, காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு எதிராக, காங்கிரசும், பா.ஜ.,வும் செயல்படுகின்றன,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மகள், முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மகன், ஆவடி நகர செயலர் தீனதயாளன் மகன் ஆகியோரது திருமணங்கள் மற்றும் ஜெ., பேரவை சார்பில், 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஆகியவற்றை, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடத்தி வைத்து, ஜெயலலிதா பேசியதாவது:
வஞ்சிக்கும் மத்திய அரசு :
தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறை பொறுப்பு வகித்து வரும் நான், சந்தித்து வரும் சோதனைகள், துன்பங்கள், இன்னல்கள் ஏராளம். மத்திய அரசு தொடர்ந்து, தமிழக அரசை வஞ்சித்து வருகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு தேவையான மண்ணெண்ணெயை கூட, மத்திய அரசு தர மறுக்கிறது. மின்சாரம், நிதியுதவி, அரசு கேபிள், "டிவி'க்கு டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றையும் தர மறுக்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று தான், காவிரி நீரையும், வெளிமாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வர, வழித் தடத்தையும் அமைக்க அனுமதி பெற வேண்டியுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட, மத்திய அரசுக்கு மனமில்லை. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இரு தேசிய கட்சிகளுக்கும், தமிழகத்தில் செல்வாக்கில்லை. தலைகீழாக நின்றாலும், அவர்களால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. இதனால், காவிரி பிரச்னையில் இரு கட்சிகளும், கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கின்றன. மத்திய அரசில் அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும், தி.மு.க., இதற்கு பக்கவாத்தியம் வாசிக்கிறது.
முன்மாதிரி :
வரலாற்றில் இல்லாத அளவுக்கு, வறட்சியால் பாதிக்கப்பட்ட, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளோம். எதிர்க்கட்சிகளும் இதை பாராட்டுகின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 20 மாதங்களில் நிகழ்த்தியுள்ள சாதனைகள், மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக உள்ளன. "ஒரு சொட்டு தண்ணீரைக் கூட தர மாட்டோம்' என, கர்நாடக அரசு கூறியது. ஆனால், விடா முயற்சியின் காரணமாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து முறையிட்டு, காவிரியில், 66 டி.எம்.சி., தண்ணீரை பெற்றுள்ளோம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, வரும், 20ம் தேதிக்குள், அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுவும், தமிழகத்துக்குக் கிடைத்த வெற்றி. காவிரி டெல்டா பகுதி செழிப்புடன் இருக்க, தமிழகத்தின் முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க, நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் மத்திய அரசை உருவாக்க வேண்டும். அதற்கு, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற, கட்சித் தொண்டர்கள் கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.
65 ஜோடிகளுக்கு 65 சீர்வரிசை : முதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெ., பேரவை சார்பில், 65 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் என்பதால், மணமக்களுக்கு, 65 சீர் வரிசைகள் வழங்கப்பட்டன. மணமகளுக்கு நான்கு கிராம் தாலி, வெள்ளி மெட்டி, பட்டுப் புடவை, மணமகனுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை வழங்கப்பட்டது. இவை தவிர, மெத்தை, ஜமக்காளம், தலையணை, பெட்ஷீட், சூட்கேஸ், சாமி படம், குத்துவிளக்கு, கமாட்சி விளக்கு, குங்கும சிமிழ், கற்பூர ஆரத்தி, துபகால், பஞ்சபாத்திரம், உத்தரணி, ஆரத்தி தட்டு, பூஜை மணி, கிரைண்டர், மிக்சி, கேஸ் ஸ்டவ், குக்கர், டேபிள் பேன், டிபன் கேரியர், சுவர் கடிகாரம், கை கெடிகாரம், குடம், தவளை, சொம்பு, டம்பளர், இட்லி அடுக்கு, சாப்பாடு பிளேட், டிபன் பிளேட், பொங்கல் பாத்திரம், கடாய், பால் பாத்திரம், குழம்பு பாத்திரம், அன்ன கரண்டி, தோசை கல், தோசை கரண்டி, தாம்பூல தட்டு உள்ளிட்ட, 65 சீர் வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
ஜெ., கருத்துக்கு பா.ஜ., பதில் : ""தமிழகத்தில் பா.ஜ., செல்வாக்கு இல்லாமல் உள்ளது என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது சரியல்ல,'' என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார் . அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், 65 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வத்து, முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ""தேசிய கட்சியான காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு தமிழகத்தில் செல்வாக்கில்லை. கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு, அக்கட்சிகளுக்கு உள்ளது. இதனால், கர்நாடகத்துக்கு சாதகமாக நடப்பதற்காக, காவிரி பிரச்னையில், தமிழகத்துக்கு துரோகம் செய்கின்றனர்,'' என, குற்றம்சாட்டினார். இதற்கு, பதில் அளித்து, பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டேன் என, கர்நாடக பா.ஜ., அரசு அடம் பிடிப்பது தவறு. கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும்.
காவரி பிரச்னையில், தமிழகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும், தமிழக பா.ஜ., துணை நிற்கும் என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். காவிரி விவகாரத்தில், தமிழகத்துக்கு ஆதரவாக, கர்நாடக, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. இந்நிலையில், பா.ஜ., துரோகம் செய்கிறது. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத கட்சி என்றெல்லாம், முதல்வர் ஜெயலலிதா பேசுவது சரியல்ல. கர்நாடகத்தில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, காவிரி பிரச்னைக்கு குரல் கொடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில், அந்த ஒற்றுமையில்லை. இதை, மத்திய அரசும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறது. எனவே, பா.ஜ.,வை குற்றம் சுமத்துவது முறையற்றது. இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.
.jpg)
No comments:
Post a Comment