Thursday, February 14, 2013
இலங்கை::வடக்கில் இடம்பெறும் அபிவிருத்தியைக் கண்டு கொள்ளாதவர்களே ஜெனீவாவிற்குச் செல்ல உடைகளைத் தயார் செய்கின்றார்கள் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வடக்கில் நடைபெறும் அபிவிருத்திக்கு இங்குள்ள மக்களே காட்சிகள் எனக் குறிப்பிட்ட அமைச்சர், கொழும்புக்கு அடுத்தபடியாக சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலை யாழ்ப்பாணத்திற்கே பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று ஆஸ்பத்திரி கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர்,
30 வருட பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாடு தற்போது அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சுகாதாரத்துறையில் பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஆஸ்பத்திரிகளை அபிவிருத்தி செய்யத்தடைகள் இருந்தன. சில ஆஸ்பத்திரிகள் முகாம்களாக இருந்துள்ளன. இப்போது முழுமையான அபிவிருத்தி இடம்பெறுகிறது.
அரசாங்கம் எத்தகைய அபிவிருத்தியை வடக்கில் மேற்கொள்கின்ற போதும் சிலர் ஜெனீவாவுக்குப் போக உடுப்பு தயார் செய்கின்றனர். அங்கு சென்று நாட்டில் மனித உரிமை இல்லை, ஜனநாயகம் இல்லை என்று பிரசாரம் செய்வார்கள். எனினும் தேசிய சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு நாம் கூறுவது காதுகளில் கேட்காமல் கண்களால் நேரடியாக வந்து பாருங்கள் என்பதே எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்


No comments:
Post a Comment