Wednesday, February 20, 2013

வைகோவுடன் தமிழக முதல்வர் திடீர் சந்திப்பு: புதிய கூட்டணிக்கு அச்சாரம்?

Wednesday, February 20, 2013
திருப்போரூர்::மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், திருநெல்வேலியில் துவக்கி, மதுரையில் முடித்தார்.இரண்டாம் கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்து, நேற்று முன்தினம் பகல், 1:30 மணிக்கு, கோவளத்தில் நடைபயணத்தை துவக்கினார். இரவு, திருப்போரூர் வந்தடைந்தார்.காலை, 10:30 மணிக்கு, மீண்டும், திருப்போரூரிலிருந்து புறப்பட்ட வைகோ, பையனூர் சென்றார்.

முதல்வர் சந்திப்பு :

மாலை, 3:15 மணிக்கு, பையனூர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது, சென்னையிலிருந்து, சிறுதாவூருக்கு சென்ற, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவ்வழியே வந்தார். அப்போது எதிர்புற சாலையில், வைகோ நடந்து வருவதைக் கண்டு, தன் காரை நிறுத்தும்படி கூறினார்; கார் நின்றதும் முதல்வர் கீழே இறங்கினார்.எதிர்புறம் நடந்து சென்று, வைகோவை சந்தித்தார். திடீரென முதல்வர் காரிலிருந்து இறங்கி வந்ததைக் கண்ட வைகோ, அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவருக்கு, வணக்கம் செலுத்தினார். முதல்வர், பதில் வணக்கம் தெரிவித்தார்.பின் வைகோவிடம் முதல்வர், அவரது நலம் மற்றும் குடும்பத்தினர் நலம் குறித்து விசாரித்தார். பதில் அளித்த வைகோ, முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின், நடைபயணம் குறித்து முதல்வர் விசாரித்து விட்டு, புறப்பட்டு சென்றார். முதல்வர்-வைகோ சந்திப்பு இரண்டு நிமிடங்கள் நீடித்தன.இது குறித்து ம.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் சத்யா கூறுகையில், ""இச்சந்திப்பு எதிர்பாராதவிதமாக நடந்தது. முதல்வருடனான சந்திப்பு, எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:

அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, தே.மு.தி.க., பிரிந்து சென்றுவிட்ட நிலையில், சட்டசபை தேர்தலின் போது கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்ட ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சந்திப்பு, வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இணையும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., ஆகியவற்றை இணைத்து, புதிய கூட்டணியை, அ.தி.மு.க., உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசியல் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment