இலங்கை::அணு ஒத்துழைப்புத் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இந்தியப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. மாறுப்பட்ட அணு மூலகங்கள் மற்றும் கதிர்வீச்சு கண்டறிதல் உள்ளிட்ட அணு ஒத்துழைப்புத் தொடர்பாக இரு நாட்டுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன் அடுத்த கட்டமாக இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் இலங்கைக்கு கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்திய குழுவொன்று இலங்கை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கூடம்குளம் அணு மின்நிலையத்தால் எவ்வித கதிர்வீச்சு ஆபத்தும் இல்லையென இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகள் எவ்விதமான ஆதாரமுமற்றவை என்றும், கூடம்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தில் எவ்வித கதிர்வீச்சுக் கசிவும் ஏற்படவில்லையென்றும் இந்தியா அறிவித்துள்ளது.
அணுசக்தி ஒழுங்கு முறைப்படுத்தல் அதிகாரசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு அமையவே கூடங்குளத்தில் மின்உற்பத்தி செய்யப்படு வதாகவும், கதிர்வீச்சுக் குறித்து எவரும் அச்சமடையத் தேவையில்லையென்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கூடம்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து செயற்பாடுகளின்போதும் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், உற்பத்தி நிலையத்தை செயற்படுத்துவதற்கு முன்னர் எல்லாவித செயற்பாட்டு வரையறைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment