Pages

Sunday, February 17, 2013

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போடும் தேதி நாளை அறிவிப்பு!

Sunday, February 17, 2013
பெங்களூர்::கடந்த 1993-ம் ஆண்டு தமிழக-கர்நாடக அதிரடிப்படை போலீசார் சென்ற பஸ்சை சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் பாலாறு அருகே கண்ணி வெடி வைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் பஸ் சின்னா பின்னமாகி சிதறி 22 பேர் பலியானார்கள். அப்போது அதிரடிப்படை சூப்பிரண்டாக இருந்த கோபாலகிருஷ்ணன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேரும் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கடந்த 12-ந்தேதி நிராகரித்தார்.

இந்த தகவல் பெல்காம் ஜெயில் அதிகாரிகளுக்கும், 4 பேர் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாள் கழித்து இவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. தெரிவித்தார். இதற்கிடையே 4 பேரையும் தூக்கிலிட தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 4 பேர் சார்பில் நேற்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், வழக்கமான நடைமுறையில்தான் இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என்றார்.

இந்த நிலையில் 4 பேரையும் தூக்கிலிடப்படும் தேதியை விசாரணை நீதிமன்றமான மைசூர் தடா கோர்ட்டு நாளை அறிவிக்கிறது. கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த தகவல் கர்நாடக சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை வைத்து 4 பேரையும் தூக்கிலிடப்படும் தேதியை அறிவிக்குமாறு மைசூர் கோர்ட்டில் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மனுதாக்கல் செய்கிறார்கள். இது தொடர்பான மனு நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

நாளையே தூக்கிலிடப்படும் தேதியை மைசூர் மாஜிஸ்திரேட்டு அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. கே.வி.ககன்தீப் கூறியதாவது:-

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் தேதியை மைசூர் நீதிமன்றம் முடிவு செய்யும். இது தொடர்பாக மைசூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வோம். நாளையே கோர்ட்டு தேதியை முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர் பார்க்கிறோம். 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கோர்ட்டு உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சைமன், ஞானபிரகாஷ் ஆகியோரின் குடும்பத்தினர் சாம்ராஜ் நகர் மாவட்டம் கெல்லேகால் தாலுகாவில் உள்ள வத்தரதொட்டி என்ற மலை கிராமத்தில் வசிக்கிறார்கள். இருவரது குடும்பத்தினரும் தங்களிடம் இதுவரை யாரும் கருணை மனு நிராகரித்த தகவலை தெரிவிக்கவில்லை என்று கூறினர். ஆனால் சாம்ராஜ் நகர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திர பிரசாத் கூறுகையில், உள்ளூர் போலீசார் மூலம் முறைப்படி கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை தெரிவித்து விட்டோம் என்றார்.

மற்ற தூக்கு தண்டனை கைதிகளான மீசை மாதையன் குடும்பத்தினர் மேட்டூர் செல்லும் வழியில் தமிழகத்தைச் சேர்ந்த கருங்கல்லூர் கிராமத்திலும், ஞானப்பிரகாசம் குடும்பத்தினர். சந்தனப்பாளையம் கிராமத்திலும் வசிக்கிறார்கள்.

No comments:

Post a Comment