Pages

Thursday, February 14, 2013

தலைவர்களின் சுயநல அரசியலால் துயரம் சுமக்கும் தமிழ் மக்கள்!

Thursday, February 14, 2013
இலங்கை::அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாடு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையை வளர்ப்பதற்காகத் தமிழ்த் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதைப் பார்க்கின்றோம். இதே தலைவர்களும் ஊடகங்களும் தமிழ் மக்களுக்கு அச்சமூட்டும் பிரசாரத்தில் சில காலம் ஈடுபட்டிருந்ததையும் பார்த்தோம். அதாவது சர்வதேச சமூகம் அர்த்தபூர்வமான முறையில் தலையிடாவிட்டால் தமிழினம் அழிந்துவிடும் என்ற கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் வலியுறுத்தினார்கள்.

இது தமிழ்த் தலவர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வரும் தந்திரோபாயம். அப்படி ஆபத்து வரப்போகின்றது இப்படி ஆபத்து வரப்போகின்றது என்று முதலில் மக்களுக்கு அச்சமூட்டுவது பின்னர், வரவுள்ள ஆபத்தைத் தவிர்ப்பதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு எங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கூறித் தங்கள் நாடாளுமன்ற பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வது. ஒவ்வொரு தேர்தலிலும் இத்தலைவர்கள் இந்தத் தந்திரோபாயத்தையே பின்பற்றி வந்திருக்கின்றார்கள்.

இனப்பிரச்சினையின் தீர்வுக்குச் சர்வதேச சமூகத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதும் சர்வதேச சமூகம் எவ்வளவு தான் அழுத்தம் பிரயோகித்தாலும் இறுதியில் அரசியல் தீர்வு சிங்கள மக்களின் ஆதரவிலேயே தங்கியுள்ளது என்பதும் தெரியாதவர்களல்ல இந்தத் தமிழ்த் தலைவர்கள். சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான சிரமம் மிகுந்த முயற்சியில் ஈடுபடுவதிலும் பார்க்க வழமையான ஒப்பாரி அரசியலின் மூலம் தங்கள் நாடாளுமன்றப் பதவிகளை இலகுவாகப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இவர்கள் கருதுகின்றார்கள்.அதனால், சர்வதேச சமூகத்தின் மீது எல்லாப் பொறுப்பையும் போட்டுவிட்டுச் சர்வதேச சமூகத்தை வழிநடத்துபவர்கள் போன்ற பாவனையில் அடிக்கடி வெளிநாட்டுப் பிரயாணத்தை மேற்கொள்வதும் மக்களின் ஆதரவைத் தக்கவைப்பதற்காக ஆவேச அரசியல் நடத்துவதுமாகக் கடத்துகின்றார்கள். இவர்கள் கச்சிதமாகக் கட்டி வளர்த்திருக்கும் சர்வதேச சமூகம் என்ற மாயை உடைந்துவிடும் போதுதான் மக்களுக்கு உண்மை விளங்கும்.

மக்களுக்குத் தலைமை தாங்குபவர்களிடம் இருக்கவேண்டிய இரண்டு பிரதான பண்புகள் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வில் நேரடியாக ஈடுபடுவதும் தங்களை நம்பிய மக்களை ஏமாற்றாதிருப்பதுமாகும். இந்த இரண்டு பண்புகளும் கூட்டமைப்புத் தலைவர்களிடம் இல்லை. இனப்பிரச்சினைக்குச் சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறுவதைத் தவிர அரசியல் தீர்வுக்காக இவர்களின் நேரடியான ஈடுபாடு எதுவும் இல்லை. நேரடியான ஈடுபாட்டின் முதலாவது கட்டம் தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்து வெளியிடுவதாகும். இன்று வரை கூட்டமைப்பு அதைச் செய்யவில்லை.

சர்வதேச சமூகம் பற்றிக் கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். சர்வதேச சமூகம் தீர்வுத் திட்டத்துடன் அரசாங்கத்தின் கதவைத் தட்டுகிறது என்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்கள். அது பொய் என்றாகிவிட்டது. மார்ச் மாத ஜெனீவா மாநாட்டுக்குப் பின் அரசாங்கம் பணிந்து வந்துவிடும் என்று இப்போது சொல்கின்றார்கள். இதுவும் பொய்யாகவே முடிந்துவிடும்.

சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் தமிழினம் அழிந்துவிடும் என்று இத்தலைவர்கள் கூறுவதன் நேரடி விளக்கம் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதாகும். நம்பிக்கை வைத்துத் தெரிவு செய்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எதுவும் செய்ய இயலாதென்றால் ஏன் இவர்கள் தொடர்ந்தும் தலைவர்களாக இருக்க வேண்டும்? தமிழர்களைச் சர்வதேசம் காப்பாற்ற வேண்டும் என்று இன்றைய தலைவர்கள் கூறும் பாணிலேயே தமிழ் மக்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நாற்பது வருடங்களுக்கு முன் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சொன்னார். கடவுள் காப்பாற்றியதாலோ என்னவோ இன்றும் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.

ஆனால், பின்னடைவுகளையும், இழப்புக்களையும் அனுபவித்துக் கொண்டே வாழ்கின்றார்கள். இந்தப் பின்னடைவுகளுக்கும் இழப்புகளுக்கும் கடவுள் காரணமல்ல. நாற்பது வருட காலத்தில் தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளே இவற்றுக்குக் காரணம். பண்டா-செல்வா ஒப்பந்தத்தைச் சிங்களத் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றும் அது நடைமுறைக்கு வந்திருந்தால் இனப்பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்கும் என்றும் கூட்டமைப்புத் தலைவர்கள் அடிக்கடி கூறுகின்றார்கள். எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சன் அரசறிவியல் பேராசிரியர். தனது மாமனாரின் அரசியல் வாழ்க்கை பற்றி எழுதிய புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் முதலாவது குடியரசு அரசியலமைப்பைத் தயாரித்துக்கொண்டிருந்த காலத்தில் மு.திருச்செல்வத்துக்கூடாக எஸ.ஜே.வி. செல்வநாயகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பியது. அரசியலமைப்பைத் தயாரிப்பதில் தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வங்கினால் பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் முக்கியமான சரத்துகளை அரசியலமைப்பில் உள்ளடக்கலாம் என்பதே அச்செய்தி. தமிழரசுக் கட்சி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டது. பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால் இனப்பிரச்சினை தீர்ந்திருக்கும் என்று இன்று கூறுபவர்கள் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தபோது அதை நிராகரித்துவிட்டார்கள். இதை அத்தலைவர்களின் தவறு என்பதற்குப் பதிலாகத் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் எனக் கூறுவதே பொருத்தமானது.

சமஸ்டித் தீர்வைக் கைவிட்டுவிட்டு நடைமுறைச் சாத்தியமற்ற தனிநாட்டுத் தீர்மானத்தை மேற்கொண்டது அடுத்த தவறு. 1970 பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறை நவரத்தினத்தின் தமிழர் சுயாட்சிக் கழகம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் பிரசாரம் செய்தது. தனிநாட்டுக் கோரிக்கை தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவுகளைக் கொண்டுவந்துவிடும் என்று அப்போது தமிழரசுக் கட்சி எதிர்ப் பிரசாரம் செய்தது. தேர்தல் முடிந்து சிறிது காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்துத் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டையில் தமிழரசுக் கட்சியின் அமிர்தலிங்கமும் உடுப்பிட்டியில் தமிழ் காங்கிரஸின் சிவசிதம்பரமும் தோல்வியடைந்த நிலையில், இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையின் விளைவாக உருவாகியதே தமிழர் விடுதலைக் கூட்டணி. சமஸ்டிக் கொள்கையைப் பின்பற்றிய தமிழரசுக் கட்சியும் அக்கொள்கையைத் தீவிரமாக எதிர்த்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கூட்டுச் சேர்வதற்குச் சமஸ்டி அல்லாத கொள்கை தேவைப்பட்டதால் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இது தலைவர்களின் சுயநலத்துக்காக நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பவாதத் தீர்மானம். தமிழரசுக் கட்சி 1970 தேர்தல் பிரசாரத்தில் கூறியது போல, தனிநாட்டுத் தீர்மானம் தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவையே கொண்டு வந்தது. கடந்த முப்பது வருடங்களிலும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் அனுபவித்த இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் இத்தீர்மானமே காரணம். பேரினவாதிகள் பலமடைவதற்கும் தனிநாட்டுத் தீர்மானம் காரணமாகியது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கையை சிங்கள மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையையும் தனிநாட்டுத் தீர்மானம் தோற்றுவித்தது.

சந்திரிகா குமாரதுங்கவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்குச் செய்த இன்னொரு துரோகம். அந்தத் தீர்வுத் திட்டம் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு. அதன் பிராந்திய சபைகள் பல விடயங்களில் இந்திய மாநிலங்களிலும் பார்க்கக் கூடுதலான சுயாட்சி அதிகாரத்தைக் கொண்டவை. கூட்டமைப்புக் கட்சிகள் ஆதரித்திருந்தால் அத்தீர்வுத் திட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியிருக்கும். அது நடைமுறைக்கு வந்திருந்தால் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைத்திருக்கும்.

அந்தத் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்று இப்போது கூறுபவர்கள் அன்று அதற்கு ஆதரவு வழங்கியிருந்தால் அண்மைக் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் இழப்புகளையும் தவிர்க்க முடிந்திருக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தலைவர்கள் தங்கள் சுயநலத் தேவைகளை முன்னிலைப் படுத்தி, தமிழ் மக்களுக்குத் தீமை பயக்கும் முடிவுகளையே எடுத்திருக்கின்றார்கள். இனப்பிரச்சினை தீர்வுக்கு வருவதை இவர்கள் விரும்பாததே இதற்குப் பிரதான காரணம். இனப்பிரச்சினை இருக்கும் வரை அதைப் பற்றிப் பேசியே இலகுவாக நாடாளுமன்றத்துக்குப் போகலாம் என்று நினைக்கின்றார்கள்.

இன்று சர்வதேச சமூகம் பற்றிப் பேசுவதும் இனப்பிரச்சினை தீரக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடு. சர்வதேச சமூகத்தினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தர முடியாது என்பது இவர்களுக்குத் தெரியும். தங்கள் சுயநலத்துக்காகத் தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச சமூகம் என்ற மாயையை வளர்க்கின்றார்கள்.

சங்கர சிவன்

No comments:

Post a Comment