Pages

Wednesday, February 20, 2013

வடக்கில் இராணுவம் பயன்படுத்தாத காணிகளை விடுவிக்க நடவடிக்கை: இராணுவம் பயன்படுத்தும் காணிகளுக்கு நஷ்டஈடு வழங்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Wednesday, February 20, 2013
இலங்கை::வடக்கில் இராணுவம் பயன்படுத்தாத காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து ள்ளதோடு இராணுவம் பயன்படுத்தும் காணிகளுக்கு நஷ்டஈடு வழங்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சிற்கமைய வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகையில் ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்து எதிர்க் கட்சிகளின் கூட்டணி பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது சொந்த இடங்களில் மக்களை மீள் குடியேற்றுமாறு கோரி எதிர்க்கட்சிகளின் கூட்டணி தெல்லிப்பழையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;

வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டு அதனூடாக நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இதனை அமுல்படுத்துவதற்கு எதிராக சுமந்திரன் எம்.பி. வழக்குத் தொடர்ந்து அதற்கு இடையூறு செய்தார்.

ஆனால் இன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சை அமுல்படுத்துமாறு கோருவது நகைப்புக்குரியதாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்த காணி அமைச்சு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் பிரதேச செயலாளர்களை அறிவூட்டி வருகிறோம்.

வடக்கில் காணி விவகாரம் தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்புடன் விசேட திட்டம் முன்னெடுக்கவும் அதற்காக பட்டதாரிகளை நியமிக்கவும் உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment