இலங்கை::பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் விவகாரம் உட்பட சனல்4 இன் சகல செயற்பாடுகளும் போலியானவையே என தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல அதன் செயற்பாடுகள் உண்மையென்றால் ஏன் பகுதி பகுதிகளாக விடயங்கள் வெளியிடப்பட வேண்டுமெனவும் அதற்கென ஏன் 4 வருடங்கள்'சனல் 4' காத்திருந்தது எனவும் கேள்வியெழுப்பினார்.
வியாழக்கிழமை கொழும்பில் அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள பிரபாகரனின் இளைய மகன் இறப்பதற்கு முன்னரான புகைப்படங்கள் தொடர்பாகக் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தெரிவிக்கையில்;
இது வழக்கமான திட்டமிட்ட செயற்பாடே. இதுபோன்று கடந்த வருடமும் ஒன்று வெளியாகியது. இவை ஒவ்வொரு வருடமும் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றது. இதன்படி யுத்தம் முடிவடைந்து அடுத்த 5 ஆவது வருடத்திலும் இதுபோன்ற ஏதாவது வரலாம்.
சனல் 4 இன் செயற்பாடுகள் முற்றுமுழுதாக போலியானவை. அவை உண்மையென்றால் ஏன் வருடா வருடம் மனித உரிமை பேரவை கூடும் வேளையில் இவை வெளியிடப்பட வேண்டும். அதற்காக ஏன் 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும். இது நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.
இதேவேளை தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் தெளிவாக கூறியுள்ள அதேவேளை யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதியும் மிகத் தெளிவாக இது தொடர்பாகக் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்முறை மனித உரிமைகள் பேரவைக்கு முகம் கொடுக்க அரசாங்கத்தின் குழுவினர் தயாராகவே இருக்கின்றனர்.என்றார்.

No comments:
Post a Comment