Monday, December 10, 2012

ஆப்கனில் பரபரப்பு : தலிபான்கள் கடத்திய அமெரிக்க டாக்டர் மீட்பு!

Monday, December 10, 2012
காபூல்:.ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுடன் மருத்துவ குழுவும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தலைநகர் காபூலின் புறநகரில் உள்ள சரோபி மாவட்டத்தில், அமெரிக்க டாக்டர் திலீப் ஜோசப் என்பவரை கடந்த புதன்கிழமை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் படைகளுடன் அமெரிக்க வீரர்களும் சேர்ந்து, டாக்டரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில், அமெரிக்க டாக்டரை தலிபான் தீவிரவாதிகள் சித்ரவதை செய்யவோ, கொலை செய்யவோ வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு பகலாக தீவிரமாக டாக்டரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை தலிபான்களின் மறைவிடத்தை கண்டுபிடித்து அதிரடியாக தாக்குதல் நடத்தினர். பின்னர் டாக்டர் திலீப்பை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து அமெரிக்க கூட்டு படை ஜெனரல் ஜான் ஆலன் கூறுகையில், திட்டமிட்டு தாக்குதல் நடத்தி டாக்டரை மீட்டோம். விரைவில் அவர் குடும்பத்துடன் சேர்ந்து விடுவார் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment