Monday, December 10, 2012
நெல்லை::கூடங்குளம் அணுமின் நிலையத்தை இன்று முற்றுகையிட போராட்ட குழுவினர் திட்டமிட்டுள்ளதால், 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி அணுமின் நிலையத்தை கடல் வழியாக வந்து முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் மீது போராட்ட கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. சாலைகளில் மரங்களை வெட்டி போட்டனர். மறுநாள் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில், அணு உலையில் எரிபொருள் நிரப்பி சோதனை ஓட்டத்துக்கு தயாராகி உள்ளது. இதை கண்டித்து அக்டோபர் 8ம் தேதி பல மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் வழியாக வந்து அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டனர். இன்று உலக மனித உரிமை நாள் கடைபிடிப்பதை முன்னிட்டு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீண்டும் இன்று அணுமின் நிலையத்தை முற்றுகையிட இடிந்தகரை சர்ச் வளாகத்தில் குவிந்தனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் படகுகளில் அணிவகுத்து சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை 500 மீட்டர் தொலைவில் முற்றுகையிட்டனர்.
இப்போராட்டம் இன்று பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தில் ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இன்று முற்றுகை போராட்டம் நடப்பதால், கூடங்குளம், இடிந்தகரை, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் உள்ளிட்ட சில பகுதிகளில் மணிமுத்தாறு, ராஜபாளையம், பழநி, திருச்சி, மதுரையை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் 2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், குமரி, தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 4,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலோர காவல் படை விமானம், ஹெலிகாப்டர், கப்பல் மற்றும் மோட்டார் படகுகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ன. மத்திய, மாநில உளவு துறையினரும் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி திரவ இயக்க ஆய்வு திட்ட மையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்து நேற்றிரவு முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கடற்கரையோர மீனவ கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

No comments:
Post a Comment