Monday, December 10, 2012
இலங்கை::யாழ்.மாநகர சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
யாழ் மாநகரசபை முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இன்று யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தலைமையில் விசேட வரவு செலவுத்திட்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, யாழ்.மாநகர சபை முதல்வரால் கொண்டு வரப்பட்ட 752.7 மில்லியன் ரூபாய்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 08வாக்குகளும் அளிக்கப்பட்டதால் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 4 மேலதிக வாக்குக்களால் மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.றெமிடியஸ் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்ற கீதத்துடன் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய யாழ்.மாநகர முதல்வர் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறோம். இந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் தனக்கு உதவிய கணக்குப்பகுதி உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.
30 ஆண்டு கால யுத்தத்தினால் சீரழிந்த யாழ்.நகரையும் யாழ் மாநகர சபையின் சிறப்பான செயற்பாடுகளால் வருடாந்த வருவாயையும் அதிகரிக்கும் நோக்குடன் பல புதிய திட்டங்களை திட்டமிட்டு இரவு பகலாக செயற்பட்டுவருவதால் யாழ் மாநகர சபை வருவாய் வருடம் தோறும் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு 302.8 மில்லியனாகவும்,, 2010ஆம் ஆண்டு 307.1மில்லியனாகவும், 2011 ஆம் ஆண்டு 527.2மில்லியனாகவும் காணப்பட்ட யாழ் மாநகரசபையின் வருட வருமானம் 2013 ஆம் ஆண்டில் 752.7மில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாகவும், இது மாநகரசபையின் அயரா முயற்சியின் பயனாக கிடைத்த வெற்றி என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் மாநகர சபை கௌரவ உறுப்பினர்கள்,மாநகர ஆணையாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment