Pages

Thursday, June 14, 2012

மதுரை இளைய ஆதீன பதவியில் இருந்து நித்தியை நீக்க ஆலோசனை: மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் பரபரப்பு பேட்டி!

Thursday, June, 14, 2012
மதுரை::நித்யானந்தாவை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான விஷயத்தில் அவசரம் காட்ட முடியாது. அதுதொடர்பாக ஒரு மீட்டிங்கில் முக்கியமாக ஆலோசித்து கொண்டு இருக்கிறேன். அந்த மீட்டிங் முடிந்த பிறகு எனது முடிவை சொல்கிறேன்’’ என்று மதுரையில் இன்று மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் கூறினார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இன்று அளித்த பேட்டி: நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறை காவலில் உள்ளாரே? அவரை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்குவீர்களா? நித்யானந்தா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்து இன்று காலை ‘தினகரன்’ பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதில் எனது முடிவை விளக்கி உள்ளேன். இதுகுறித்து என்னிடம் பலரும் தொலைபேசியில், ‘இப்படி பேட்டி கொடுத்துள்ளீர்களே?’ என்று கேட்டனர். நானும் ‘ஆமாம்’ என்று சொன்னேன். (தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘இளைய ஆதீனத்தை நீக்க எனக்கு அதிகாரம் உள்ளது. 2004ல் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட சுவாமிநாதனை நீக்கி இருக்கிறேன். நித்யானந்தாவை நீக்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை. நீதிமன்ற முடிவு வரட்டும்’ என்று அருணகிரி நாதர் கூறியிருந்தார்) நீக்குவது குறித்து இன்றுள்ள நிலவர அடிப்படையில் முடிவு எதுவும் எடுத்துள்ளீர்களா? இன்னும் முடிவு எடுக்கவில்லை. ரொம்ப கவனமாக தீவிர பரிசீலனைக்கு பிறகே முடிவு எடுக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது. தமிழகத்திலுள்ள மற்ற ஆதீனங்கள், மடாதிபதிகள் நித்யானந்தாவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்களே? நானும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இந்தியாவின் மூத்த ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நீக்க மூத்த ஆதீனம் முடிவு எடுக்காமல் யோசித்து கொண்டு இருப்பது வேதனைக்குரியது என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்களே? நான் யோசித்து தானே முடிவு எடுக்க வேண்டும். அவசரம் காட்ட விரும்பவில்லை. இப்போது ஒரு மீட்டிங்கில் முக்கியமாக அதுபற்றித்தான் ஆலோசித்து கொண்டு இருக்கிறேன். அந்த மீட்டிங் முடிந்த பிறகு சொல்கிறேன். இவ்வாறு ஆதீனம் பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment