Thursday, June 14, 2012

இன்று காலை மருத்துவ பரிசோதனை நித்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம்!

Thursday, June, 14, 2012
பெங்களூர்::பெங்களூர் அடுத்த ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்யானந்தா. இவர் மீது அமெரிக்க பெண் சீடர் ஆர்த்திராவ் பாலியல் புகார் கூறினார். இதனால் நித்யானந்தாவுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது சீடர்கள் தாக்குதல் நடத்தியதால் பிரச்னை பெரிதானது. இதையடுத்து முதல்வர் சதானந்த கவுடா உத்தரவின்படி, கலெக்டரும் எஸ்பியும் ஆசிரமத்தில் தீவிர விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இதுகுறித்து கேபினட்டில் அவசர ஆலோசனை நடத்திய பின், நித்தியை கைது செய்யவும் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தி சீல் வைக்கவும் சதானந்தா உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் நித்தி தலைமறைவானார். இதற்கிடையில், பிடதி ஆசிரமத்தை அரசு உயர் அதிகாரிகள், போலீசார் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தங்கம், வெள்ளி உள்பட வேறு பல பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். போலீஸ் சோதனையை அடுத்து ஆசிரமத்தில் இருந்த பக்தர்களும் சீடர்களும் வெளியேறினர். தலைமறைவான நித்யானந்தா நேற்று மாலை திடீரென ராம்நகரில் உள்ள ஜேஎம்எப்சி கோர்ட்டில் நீதிபதி கோமளா முன்னிலையில் ஆஜரானார். அப்போதே ஜாமீன் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால், நித்யானந்தாவை நாளை வரும்படி நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டை விட்டு வெளியில் வந்த அவரை போலீசார் கைது செய்து காரில் ஏற்றி சென்றனர்.

சென்னப்பட்டினத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் சிறை வைக்கப்பட்ட நித்யானந்தாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு அனுபம் அகர்வால், மண்டல போலீஸ் டிஐஜி பாஸ்கர ராவ் ஆகியோரும் விசாரணை நடத்தினர். நேற்று நள்ளிரவிலும் நித்யானந் தாவிடம் போலீசார் சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளனர். பாலியல் தொடர்பான புகார்கள், ஆசிரமம் பற்றிய தகவல்கள் அவரிடம் கேட்கப்பட்டதாகவும் நித்யானந்தாவும், அந்த கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. சென்னப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நித்யானந்தாவை போலீசார் இன்று காலை அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு ராம்நகர் கோர்ட்டில் நித்யானந்தாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடம் பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து நிறைய விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அவரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

பிடதி ஆசிரமத்தில் இன்றும் ரெய்டு

நித்தியின் பிடதி ஆசிரமத்தில் ராம்நகர் போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீராம்ரெட்டி தலைமையிலான போலீசார் 3வது நாளாக இன்றும் ரெய்டு நடத்தி வருகின்றனர். ஆசிரம வளாகத்திலுள்ள ஒவ்வொரு அறையாக வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதித்து வருகின்றனர். அங்கு கைப்பற்றப்படும் ஆவணங்கள், பொருட்கள் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், சோதனை நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவில் அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர். ஆசிரமத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் இன்றும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சீடர்கள் மடத்தை விட்டு வெளியேறி விட்ட நிலையில், சில முக்கிய நிர்வாகிகள் மட்டும் சோதனையின்போது ஆசிரமத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், பொருட்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment