Friday, June, 15, 2012புதுடெல்லி::ஜனாதிபதி பதவிக்கு மம்தா, முலாயம் சிங் பரிந்துரைத்த மன்மோகன் உட்பட 3 பேரை வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் மறுத்து விட்டது. பிரணாப்புடன் சோனியா காந்தி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 19ம் தேதி நடக்கிறது. அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகியவை பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகிய 2 பேரில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்புகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளன.
ஆனால், கூட்டணியில் இடம் பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் சோனியாவை சந்தித்த பின், பிரணாப்பை ஏற்க முடியாது என்று அறிவித்தது காங்கிரசுக்கு பெரும் ஷாக். அது மட்டுமல்லாமல், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கை சந்தித்து, மன்மோகன், சோம்நாத் சட்டர்ஜி, கலாம் ஆகிய மூவர் பெயரை பரிசீலிக்கலாம் என்று கூறியது இன்னும் கோபத்தை காங்கிரசுக்கு ஏற்படுத்தி விட்டது.
நிராகரிப்பு: டெல்லியில் நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி, ‘‘பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங்கை மாற்ற விரும்பவில்லை. மம்தா அறிவித்த மற்ற 2 பேரையும் காங்கிரசால் ஏற்க முடியாது. 2014ம் ஆண்டு வரை முழு பதவிக் காலமும் பிரதமர் பதவியில் மன்மோகன் நீடிப்பார் என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. அவரை பிரதமர் பதவியில் இருந்து மாற்ற முடியாது’’ என்றார்.
அவசர ஆலோசனை: ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சோனியாவின் வீட்டுக்கு பிரணாப் முகர்ஜி நேற்று காலை சென்றார். 30 நிமிடம் இருவரும் ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சர்கள் அந்தோணி, சிதம்பரம், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோரும் உடனிருந்தனர். மம்தாவால் ஏற்பட்டுள்ள சிக்கலை சமாளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பாஜ, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் அதிகாரபூர்வமற்ற முறையில் தனித்தனியே சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இதனால், தலைநகர் டெல்லியில் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது.
டெல்லியில் பரபரப்பு நேற்றைய டாப் 10
ய் காங் மாநில முதல்வர்களுக்கு மேலிடம் அவசர அழைப்பு. கூட்டணி தலைவர்களுடன் பேச்சு.
கூட்டிக்கழித்து பார்த்து விடுவது என்று காங் மேலிடம் தயாராகி விட்டது.
இன்றைய காங்கிரஸ் கூட்டணி கூட்டத்தில் மம்தா பங்கேற்க மாட்டார்.
மன்மோகன் 2014 வரை பிரதமராக நீடிப்பார் என்று காங் திட்டவட்டம்.
பேச்சு ரகசியத்தை உடைத்து விட்டார் மம்தா என்று காங்கிரஸ் கூறியதற்கு மம்தா தரப்பு காரசார பதிலடி.
‘ 2014 லோக்சபா தேர்தலில் மம்தா , முலாயம் கூட்டணி வரலாம் என்று பரபரப்பு பேச்சு.
’ இடதுசாரி ஆதரவுக்கு நேரடியாக களம் இறங்கி விட்டார் பிரணாப்.
“ முலாயமுடன் மம்தா நேற்று மாலை மீண்டும் பேச்சு.
” கலாமுக்கு பாஜ அணி ஆதரவு கிடைக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
அத்வானி , ஜெயலலிதா சந்திப்பு, டெல்லி பாஜ தலைவர்களிடம் புது குஷி.
புத்ததேவுடன் பிரணாப் தொலைபேசியில் பேச்சு
முள்ளை முள்ளால் எடுப்பது போல மம்தா வெறுக்கும் கம்யூனிஸ்ட் ஆதரவை பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது. மே.வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவுடன் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் பேசி ஆதரவு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னுதாரணம் இல்லை: பிருந்தா கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத் கூறுகையில், ‘‘பதவியில் இருக்கும் பிரதமர் பெயரை ஜனாதிபதி பதவிக்கு மம்தா பானர்ஜி பரிந்துரைப்பது முன்னுதாரணம் இல்லாதது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடு நிலவுவதையும் எந்த கொள்கையும் இல்லை என்பதையும் இது காட்டுகிறது’’ என்றார். ஜனாதிபதி பதவிக்கு பிரணாப்பை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது. பிரணாப்பை ஆதரிப்பதில் மார்க்சிஸ்டுக்கு தயக்கம் ஏதும் இல்லை என்று கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரை மம்தா சந்திக்கவில்லை
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து டெல்லியில் சோனியா காந்தியை மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் சந்தித்த பிறகு, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் அதை இறுதி செய்யாமல் இருந்ததால் நேற்று முன்தினம் பிரதமரை மம்தா சந்திக்கவில்லை. நேற்று காலை கொல்கத்தா திரும்ப திட்டமிட்டு இருந்த மம்தா, கடைசி நேரத்தில் அதை ரத்து செய்து விட்டு டெல்லியிலேயே முகாமிட்டார். இதனால், பிரதமரை அவர் சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது பற்றி ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான முகுல் ராயி டம் கேட்டபோது, ‘‘பிரதமரை மம்தா சந்திக்கும் பேச்சே எழவில்லை’’ என்றார்.
பிரணாப்பா... அன்சாரியா? இன்று அறிவிப்பு
பாஜ உட்பட எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்தாலும் இடதுசாரி மட்டும் சேராவிட்டால் போதும். காங் அணி வேட்பாளர் வெற்றி உறுதி.
அந்த தெம்பில் தான் காங்கிரஸ் கூட்டணி தன் வேட்பாளரை முடிவு செய்கிறது. வேட்பாளர் பிரணாப் தானா? ஹமித் அன்சாரியா? இன்று தெரியும்.
பிரணாப்புக்கு ஆதரவு எப்படி?
பிரணாப்பை காங் நிறுத்தினால், முலாயம், மம்தா கட்சி பலம் இல்லாமல் ஜெயிக்க முடியுமா? எதிர்க்கட்சிகளுக்கு பலம் எப்படி? இதோ ஒரு கணக்கு:
* காங் + கூட்டணி கட்சிகள் = 53%
* திரிணாமுல் , சமாஜ்வாடி இல்லாமல் காங் கூட்டணி : 43%
* ஐக்கிய ஜனதா தளம் இல்லாமல் பாஜ அணி : 38%
* இடதுசாரி, பகுஜன், அதிமுக, பிஜேடி, திரிணாமுல், சமாஜ்வாடி மற்றும் பாஜ சேர்ந்தால் : 53%
சோம்நாத் சட்டர்ஜி ஆச்சர்யம்
புதுடெல்லி : ஜனாதிபதி வேட்பாளராக மம்தாவும், முலாயம் சிங் யாதவும் தன்னை பரிந்துரை செய்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.
லண்டனில் உள்ள சோம்நாத் சட்டர்ஜியிடம் இது பற்றி கேட்டபோது, ‘‘ஜனாதிபதி வேட்பாளராக நாட்டின் 2 முக்கிய கட்சிகள் என்னை முன்னிறுத்தி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை வேட்பாளராக பரிந்துரை செய்தது மிகப்பெரிய கவுரவம்’’ என்றார்.
சோனியாவுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு
சோனியா காந்தியை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் டி.ஆர்.பாலு கூறுகையில், ‘‘ஜனாதிபதி வேட்பாளர் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் அந்தோணி கடந்த மாதம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கருணாநிதி ஒரு பெயரை தெரிவித்தார். அது அந்தோணி மூலம் சோனியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர் பெயரை சோனியா காந்தி எந்த நேரமும் அறிவிப்பார்’’ என்றார்.
ரகசியத்தை கூறியதால் காங். கடுங்கோபம்
மம்தாவின் திடீர் நிபந்தனையால் காங்கிரஸ் ஒருபுறம் அதிர்ச்சி அடைந் தாலும் மறுபுறம் கோபமும் அடைந்துள்ளது. கூட்டணி தலைவர் என்ற முறையில் வேட்பாளர் பெயர்களை பரிசீலனைக்காக மம்தாவிடம் தெரிவித்தால் அதை பகிரங்கமாக நிருபர்களிடம் மம்தா கூறியது நாகரிகமற்ற செயல் என்று காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment