Friday, June 15, 2012

தனி ஈழம் மலர்வதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் வழிவகுக்கும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர!

Friday, June, ,15, ,2012
இலங்கை::தனி ஈழம் மலர்வதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் வழிவகுக்கும். வடக்குத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தைத் தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

தனி ஈழத்தை அமைப்பதற்கு மேற்குலகம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பொறியைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. எனவே, அரசு அதில் சிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே தேஷப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும். அது பின்னர், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் அதனை ரத்துச் செய்யுமாறு நாம் கோருகின்றோம்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதன் அதிகாரங்கள் தீயசக்தியிடம் செல்லும். அந்த சக்தியைப் பயன்படுத்தி புலி ஆதரவாளர்களுடன் இணைந்து தனி ஈழத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பர். எனவே, வடக்கு மாகாண சபைத் தேர்தலை தற்போதைய சூழ்நிலையில் அரசு நடத்தக்கூடாது, வடக்குத் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமளிக்கவும் கூடாது.

வடக்குத் தேர்தலை நடத்துமாறு மேற்குலக நாடுகள் வலியுறுத்துகின்றன. அந்த நாடுகளின் உள்நோக்கம் என்னவென்பதை நாம் அறிவோம். அதனால் மேற்குலகம் விரிக்கும் வலையில் அரசுந ஒருபோதும் சிக்கக்கூடாது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தை தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும். எனவே, அரசு இந்த விடயத்தில் சிந்தித்துச் செயற்படவேண்டும். தேசத்துரோகமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சம்பந்தனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சட்டமா அதிபருக்கும், சபாநாயகருக்கும் நான் கடிதம் அனுப்பவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment