Pages

Wednesday, June 13, 2012

போலி பாஸ்போர்ட்: வெளிநாடு செல்ல முயன்ற 3 இலங்கை வாலிபர்கள் சென்னையில் கைது!

Wednesday,June,13,2012
சென்னை::சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் சந்தேகத்திற்கிடமாக 5 பேர் தங்கி இருப்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாட்ஜில் பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முயற்சித்தது தெரியவந்தது. அவர்கள் இலங்கையை சேர்ந்த பாலகுமார்(25), டியூக் ரிபைனியர்ஸ்(27), தர்மசீலன்(28) என்பதும் மூன்று பேரும் கே.கே.நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்துள்ளனர்.

இதில் தர்மசீலன் கோவையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆந்திராவை சேர்ந்த புரோக்கர்கள் சீனிவாசராவ், பிரபாகரன் உதவியுடன் போலி பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்துள்ளது.

போலியாக வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை தயாரித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெவ்வேறு பெயர்களில் இந்த போலி பாஸ்போர்ட்களை பெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதவிர இவர்களுக்கும் போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் என்ன தொடர்பு? வெளிநாடுகளில் இருந்து பண பரிமாற்றம் ஏதாவது நடைபெறுகிறதா? போலி பாஸ்போர்ட் கும்பல் சென்னையில் வேறு எங்கெல்லாம் பதுங்கி உள்ளார்கள்? என்பது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment