Pages

Wednesday, June 13, 2012

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்!

Wednesday, June, 13, 2012
சென்னை::இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை வரும் திங்கள்கிழமை (ஜூன் 18) முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.

சென்னை திருவேற்காட்டில் நடைபெறும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான 29 சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களில் அரசு சார்பில் இலவச திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

குறிப்பாக, 2002 முதல் 2003-ம் ஆண்டுகளில் 1008 மற்றும் 1053 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களை நடத்தி வைத்து அவர்கள் நல்ல முறையில் வாழ்வதற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை அளித்தார்.

மேலும், 2001 முதல் 2006-ம் ஆண்டுகளுக்குள் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்து அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார்.

திருவேற்காடு அருகே... இதேபோன்று இப்போதும் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்கென, சென்னை திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் அருகே 9 ஏக்கர் பரப்பில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை காலை 9.30 மணியில் இருந்து 10.29 மணிக்குள் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஜெயலலிதா உரையாற்றுகிறார்.

சீர்வரிசைப் பொருள்கள்: திருமணம் செய்து வைக்கப்பட உள்ள ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

அதாவது, முகூர்த்தத்துக்குத் தேவையான வெள்ளி மெட்டி, புடவை, வேட்டி, துண்டு, சட்டை ஆகியனவும், பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச் சிமிழ், குடம், சாப்பாட்டு தட்டு, கடாய், அன்னக்கரண்டி, பாய், தலையணை என மொத்தம் 29 பொருள்கள் அரசின் சார்பில் சீர்வரிசைப் பொருள்களாக அளிக்கப்படவுள்ளன.

முதல்வர் ஆலோசனை: இந்த திருமண நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் வகையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

திருமண ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment