Pages

Friday, April 6, 2012

பயங்கரவாதத்தின் அச்சம் தொடர்ந்துகொண்டிருப்பதால் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது - அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

Friday, April, 06, 2012
இலங்கை::வடக்கில் பயங்கரவாதத்தின் அச்சம் தொடர்ந்துகொண்டிருப்பதால் அங்கு நிறுவப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது. வடக்கின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற ஜெனீவா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் சம்பிக்க இங்கு மேலும் கூறுகையில்,

ஐக்கிய அமெரிக்காவினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாட்டை நெறிப்படுத்துவதற்கு அமெரிக்காவினால் முடியாமல் போயுள்ளது. ஆனால், நாம் அதனை நிறைவேற்றியிருக்கின்றோம். இதனால், எமது நாட்டின் மீது அமெரிக்கா பொறாமை கொண்டிருப்பதன் வெளிப்பாடே இலங்கைக்கு எதிரான பிரேரணையாகும்.

ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பை எதிர்த்த அமெரிக்காதான் இன்று மனித உரிமைப் பேரவையில் பிரேரணை கொண்டுவந்திருக்கின்றது.

அமெரிக்காவானது ஏனைய நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றது. அதேபோன்று, இந்து சமுத்திரத்தின் மீதும் அதன் நோக்கம் எழுந்துள்ளது.

இவ்வாறான நிலைமைகளின் பின்னணியில் தான் இந்த பிரேரணை விடயம் அமைந்துள்ளது.

மேலும், நவநீதம்பிள்ளையின் கருத்துக்களுக்கும் நிபந்தனைகளுக்கும் ஏற்ப எம்மால் செயற்பட முடியாது.

நாம் எதற்காகவும் எமது நாட்டின் கௌரவத்தைக் காட்டிக்கொடுக்கத் தயாரில்லை.

மேலும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அழுத்தம் கொடுக்கவும் முடியாது. ஆனால், இதனை அமுல்படுத்தாவிட்டால் இலங்கையில் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடும் என்று ரொபட் ஓ பிளேக் கூறுகின்றார்.

இது பாரதூரமான விடயமாகும். இதனைப் பார்க்கும் போது வடக்கில் பயங்கரவாதம் தொடர்ந்துகொண்டிருப்பதான அச்சம் நிலவுகின்றது. எனவே, வடக்கில் அமைந்துள்ள எந்தவொரு இராணுவ முகாம்களையும் அகற்றமுடியாது. மாறாக, அதனை மேலும் பலப்படுத்த வேண்டும்.

அதுமாத்திரமின்றி, இலங்கைக்கு எதிரான சர்வதேச சவாலை எதிர்கொள்ள சகலரும் இணைந்து தயாராக வேண்டுமென்றார்.

No comments:

Post a Comment