Pages

Tuesday, April 3, 2012

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்!

Tuesday, April, 03, 2012
ராமேசுவரம்::ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.

இதனால் பயந்துபோன மீனவர்கள் வலைகளை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்காமல் பாதியிலேயே அவசர அவசரமாக கரை திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்று இரவும் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கினர்.

நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று நள்ளிரவில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த சிங்கள கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது என்று கூறி விரட்டியடித்தனர்.

சிறிது நேரத்தில் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் உயிர் பிழைத்தால்போதும் என்று அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பினார்கள். இந்த தாக்குதலில் சில மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் புகார் ஏதும் செய்யப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து மீனவர்கள் கூறும்போது ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் அன்று முதல் இன்று வரை கடலில் சென்று மீன்பிடிக்க பயமாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையும் எங்களை தாக்கினர். நேற்று எங்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

எனவே மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறினர்.

No comments:

Post a Comment