Monday, April, 09, 2012சென்னை::மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 9ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென் சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட தலைவர் ஜெ.அன்பழகன் முன்னிலையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். வடசென்னை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் காவலன் கேட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தா.மோ. அன்பரசன், மாநில சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மாவட்ட பொருளாளர் சுகுமார், துணை செயலாளர்கள் பொன்மொழி, எட்டியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் சன்பிராண்ட் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.சுந்தர், தமிழ்மணி, வைத்திலிங்கம் உள்பட மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஆர்.சேகர் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பி.எம். குமார் நன்றி கூறினார்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரிய குப்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் என்.எம். துரைசாமி, விஸ்வநாதன், நீலகண்டன், டி.ஜெ.கோவிந்தராசன், வள்ளூர் ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கா.மு.தயாநிதி, ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ். சண்முகம், பூண்டி பாஸ்கரன், ஆதிசேஷன் வரவேற்றனர். கட்சி துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகரமன்ற தலைவர் பொன். பாண்டியன் நன்றி கூறினார். இதே போல் வேலூரில் ஆர்.காந்தி, விழுப்புரத்தில் பொன்முடி, கடலுரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தஞ்சையில் கோ.சி.மணி, சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் 36 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. சட்டசபையில் உறுப்பினர்கள் தந்த ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கு மதிப்பளிக்காமல், ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை படித்து மின் கட்டணத்தில் ரூ.700 கோடி குறைப்பதாக கூறினார். இன்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மக்களின் உணர்வுக்கு ஜெயலலிதா மதிப்பளித்து தமிழ்நாட்டில் மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் போராட்டமாக மாறும். நம்மை நாமே வருத்தும் போராட்டமாக அது அமையலாம் அல்லது மறியல் போராட்டமாக அமையலாம். ஏன், சிறை நிரப்பும் போராட்டமாக உருவாகலாம்.
No comments:
Post a Comment