Sunday, April 8, 2012

கூட்டுப் பயிற்சியில் ஈடுபட அமெரிக்க போர் கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்தன: கடற்படை வீரர்களுக்கு பாரம்பரிய வரவேற்பு!

Sunday, April, 08, 2012
சென்னை::இந்தியா, அமெரிக்கா கடற்படைகள் 1992ம் ஆண்டு முதல் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இருநாட்டு கடற்படை வீரர்களும் 15வது கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்த கூட்டுப்பயிற்சி இரு கட்டங்களாக வரும் 9ம் முதல் 16ம் தேதி வரை, சென்னை அருகே வங்கக்கடல் மற்றும் அந்தமான், நிக்கோபார் கடலில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டுப்பயிற்சிக்கு மலபார்,2012 என்று பெயரிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்தல், கடல் கொள்ளையர்கள் மீது தாக்குதல், ஏவுகணை தாக்குதல், நீர்மூழ்கி கப்பலை எதிர்கொள்ளுதல், என்கவுன்டர் தாக்குதல், போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தாக்குதல் போன்ற பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதேபோல், கடலுக்கு வெளியேயும் பயிற்சிகள் நடக்க உள்ளன.
இதற்காக, அமெரிக்காவில் இருந்து யுஎஸ்எஸ் கார்ல் விஷன் (சிவிஎன்,70), எஸ்எஸ் ஹார்லே, எஸ்எஸ் பங்கர் ஹில் ஆகிய போர் கப்பல்களும் மற்றும் நீர்மூழ்கி கப்பலும் நேற்று காலை சென்னை துறை முகம் வந்தது.
எஸ்எஸ் கார்ல் விஷன் (சிவிஎன்,70) கப்பல் துறைமுகத்தில் நிறுத்த இடவசதி இல்லாததால், துறைமுக எல்லையான நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு பாரம்பரிய முறைப் படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், முதல்கட்டமாக அமெரிக்க கடற்படையின் ஒரு குழுவினர், மேற்கு தாம்பரம் முடிச்சூர் கிராமத்துக்கு சென்றனர். பொதுமக்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தினருடன் வீரர்கள் இணைந்து, அங்குள்ள ஏரியை சுத்தம் செய்தனர். இந்த குழுவினர் இன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள கிரிஸ்ட் சர்ச் பள்ளியில் குழந்தைகளுடன் ஈஸ்டர் திருவிழாவை கொண்டாடுகின்றனர். மற்றொரு குழுவினர் பிற்பகல் 3 மணிக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் நர்சரி பள்ளியில் குழந்தைகளுக்கு இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment