Tuesday, April 10, 2012

கடத்தப்பட்ட ஆட்டிகலவின் அனுபவம்!

Tuesday, April 10, 2012
இலங்கை::கடத்தப்பட்ட சோசலிச முற்போக்கு கட்சியின் உறுப்பினர் திமுது ஆட்டிகல சற்று முன்னர் கட்சியின் தலைமையகத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டவர்களால் வாகனம் ஒன்றில் அழைத்துவரப்பட்டு, கட்சி தலைமையகத்தில் விடப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர் திமுது ஆட்டிகல மற்றும் பிரேம்குமார் குணரட்ணம் ஆகியோர் கடந்த ஆறாம் திகதி கடத்திச் செல்லப்பட்டனர்.

பிரேம்குமார் குணரட்ணம் நேற்று இரவு காவற்துறையினரிடம் தஞ்சம் அடைந்த நிலையில், இன்று அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேவேளை பிரேம்குமார் குணரட்னம் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக, அவரது மனைவி அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினாலேயே அவர் கடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை மறுத்துள்ள அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க, எனினும் பிரேமகுமார் குணரட்ணம் நாடுகடத்தப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட திமுது ஆட்டிகல தாம் கடத்தப்பட்ட விதம் குறித்து எமது செய்திப்பிரிவுக்கு விபரித்தார்.

கடந்த ஆறாம் திகதி தமது அழுவலக வேலைகளை முடித்துக் கொண்டு, நண்பர் ஒருவருடன் வீடு செல்ல தயாரான போது, கொடகமவில் வைத்து வெள்ளை வான் ஒன்றினால் தாம் கடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தமது கண்ணும் வாயும் கட்டப்பட்டன.

தாம் கடத்தப்பட்டதன் பின்னர், கடத்தியவர்களால், தமது கட்சியின் சர்வதேச செயற்பாட்டாளர் தொடர்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு பதில் வழங்காமல் மௌனம் காத்தமையால், தாம் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை நீண்ட தூரத்தில் உள்ள பாதுகாப்பு தரப்பினரின் முகாம் ஒன்றிற்கு அழைத்து சென்றதாக தெரிவித்த அவர், தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

மக்கள் இயக்கத்துக்கும், சர்வதேச ரீதியாக உள்ள தொடர்புகள் தொடர்பாகவும், ஆயுதக்குழுக்கள் உள்ளனவா எனவும் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதன் பின்னர் தம்மை கைகளை கட்டிய நிலையில், அறை ஒன்றில் அடைத்து வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் மீண்டும் அதிகாலை 5.30 அளவில் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதன் போது, சகோதரர் பிரேம்குமார் குணரத்னமும் உடனிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment