Pages

Saturday, April 14, 2012

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யார்? ஒரு செய்தி ஆய்வு: சந்திரகாந்தனா? ரஊப் ஹக்கீமா? கிழக்கு மக்களின் நீண்ட எதிர்பார்ப்பு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வாம்!

Saturday, April, 14, 2012
இலங்கை::கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலொன்று வருமாயின், முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நானே போட்டியிடுவேன் அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அண்மையில் தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டால், அடுத்த முதலமைச்சர் பதவிக்காகப் போட்டியிடுவீர்களா? எனக் கேட்கப்பட்டபோதே மேற் கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுமா என்பது பற்றி எனக்கு இதுவரை எந்தத் தகவலும் அறியக்கிடைக்கவில்லை. எவரும் என்னுடன் அதைப்பற்றிப் பேசவுமில்லை. நீங்கள் கூறுவதன்படி மாகாணசபை கலைக்கப்பட்டால் முதலமைச்சர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். இப்போது முதலமைச்சராக நான் பணியாற்றுகிறேன். அடுத்த முறையும் போட்டியிடுவேன். இதில் வேறு கேள்விக்கே இடமில்லை’ என்றார் முதலமைச்சர் சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு விடயம் தொடர்பில் ஏதாவது விட்டுக் கொடுப்பைச் செய்வீர்களா எனக் கேட்டபோது பதிலளித்த அவர், ‘முதலில் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டுமே. பின்னர் எனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன்’ என்றார்.

இதேவேளை,கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கும் அரசு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஆலோசித்து வருகிறார் என்றும் ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் அரசுக்கான வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என அவர்களிடம் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவலை அறிந்த அரசுடன் இணைந்துள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள், முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை என்று அறியமுடிகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி தமது கட்சிகளின் ஆலோசனைகளை உள்வாங்கியே இறுதி முடிவை எடுக்கவேண்டும் என்று முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் நேற்று ‘ தனியார் ஊடகமொன்றுடம் தெரிவித்தனர்.

கிழக்கில் தமது கட்சிகளுக்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளதால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் முக்கிய இடத்தை வகிக்கப்போகின்றோம். ஆகவே, அரசு எடுக்கும் தீர்மானத்தில் எமது கருத்துகள் உள்ளடக்கப்படவேண்டும் என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென்ற ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே என்றும் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கான சரியான நகர்வு இதுவென்றும் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபை ஜூலை மாதமளவில் கலைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பு வட்டாரங்கள் நேற்று மீண்டும் ‘தனியார் ஊடகமொன்றுக்கு உறுதியாகத் தெரிவித்தன.

இதே வேளைழை அண்மையில் தனியார் ஊடகமொன்று மக்களிடம் கிழக்கின் முதல்வர் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்ட போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் விருப்பத்திற்குரிய ஒருவராக மக்களின் அதிக செல்வாக்கினை தற்போதைய பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வே கொண்டிருப்பதை அறிய முடிந்ததாக தகவல் கசிந்துள்ளது.

இது தொடர்பாக பிரதியமைச்சரின் ஊடக பிரிவோடு தொடர்பு கொண்டு கேட்ட போது பிரதியமைச்சர் இன்னும் இது தொடர்பாக தமக்கு எந்த முடிவினையும் தெரிவிக்க வில்லையென அறிவித்துள்ளனர். எது எப்படியோ பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment