Wednesday, April 11, 2012

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இருவரின் கருத்துக்களிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன - வெளிவிவகார அமைச்சு!

Wednesday,April,11,2012
இலங்கை::குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியுள்ளமையினால் இலங்கையிலிருந்து பிரேம்குமார் குணரத்னம் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்கும் அதிகமான காலம் அவர் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்ததாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பிரேம்குமார் குணரத்னம் மற்றும் திமுத்து ஆட்டிகல ஆகியோர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

பிரேம்குமார் குணரத்னம் தனது பெயரை வன்னிநாயக்க முதியன்செலாகே தஸ்கொன், ரன்நாயக்க முதியன்செலாகே தயாலால் மற்றும் நொயெல் முதலிகே என மூன்று தடவைகள் பெயரை மாற்றியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருவதற்கு அவுஸ்திரேலிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவர் நொயெல் முதலிகே என்ற பெயரை பயன்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த கடத்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் உண்மையானவையா என்பது தொடர்பில் பல்வேறு விடயங்களுக்கு அமைய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தவிர கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இருவரின் கருத்துக்களிலும் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேம்குமார் குணரத்னம் தொடர்பான சம்பவம் ஜோடிக்கப்பட்ட ஒன்று எனவும் அதில் வேறு எந்த நபருக்கும் சம்பந்தமில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

எவரேனும் தனது தனிப்பட்ட காரணத்திற்காக அல்லது அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment