Thursday, April 5, 2012

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:மன்மோகன் சிங்!

Thursday, April 05, 2012
புதுதில்லி:.இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது அவர் இதைத் தெரிவித்தார்.

பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சயீதின் தலைக்கு ரூ. 50 கோடி பரிசை அமெரிக்கா அறிவித்தது பற்றி பிரதமரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர், இந்தியாவுக்கு எதிராக யார் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டாலும் அவர்கள் பிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

2008 நவம்பரில் மும்பையில் நடைபெற்ற தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா இயக்கம். நான்கு நாள்கள் நீண்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது 166 பேர் கொல்லப்பட்டனர். அதில் 6 பேர் அமெரிக்க பிரஜைகள்.

இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதற்காக லஷ்கரின் நிறுவனர் ஹஃபீஸ் சயீதின் தலைக்கு ரூ.50கோடியும், அந்த இயக்கத்தின் இரண்டாம் நிலையில் இருக்கும் ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கியைக் கைது செய்வதற்கு உதவும் தகவல் அளித்தால் ரூ.10 கோடியும் பரிசளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி இந்தியாவுக்கு வரும்போது இந்த இருவர் குறித்து விவாதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது மன்மோகன் சிங் அதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

No comments:

Post a Comment