Pages

Monday, April 2, 2012

நிவாரணப் பணிகள் தொடர்கின்றன; எஞ்சிய மக்கள் விரைவில் மீளகுடியேற்றம்!

Monday, April 02, 2012
இலங்கை::வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காற்றினால் 920க்கும் மேற்பட்ட தற்காலிக இருப்பிடங்கள், கூரைகள் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார்.

இதனால் ஆயிரத்து 500 யிற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வவுனியா பிரதேசத்தில் ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் சுமார் ஆயிரத்து 500 தற்காலிக இருப்பிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணவரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதன்போது காயமடைந்த 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேதமடைந்துள்ள இருப்பிடங்களை வழமை நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஆயிரத்து 722 குடும்பங்களைச் சேரந்தவர்கள் மாத்திரமே கதிர்காமர் மற்றும் ஆனந்தக் குமாரசுவாமி நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சுமார் 200 குடும்பங்கள் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டாலும் ஒரு சில காரணங்களால் அந்தப் பணிகள் தாமதமடைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் வீசிய கடும் காற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பணிகள் துரிதப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிச்சியமாக ஆறு மாதங்களுக்குள் எஞ்சிய மக்கள் அனைவரையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குணவர்தன வீரகோன் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment