Friday, April, 06, 2012புவனேசுவரம்::ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால்-கஞ்சம் மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி இத்தாலி நாட்டு சுற்றுலாப்பயணிகளான பாவாலோ போசுஸ்கோ, கிளாடியோ கொலாஞ்செலோ ஆகியோரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று விட்டனர்.
அவர்களை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் 13 நிபந்தனைகளை விதித்தனர். மேலும், கடந்த 23-ந் தேதி பழங்குடி இனத்தை சேர்ந்த பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை துப்பாக்கிமுனையில் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று விட்டனர்.
அதைத்தொடர்ந்து, இத்தாலி சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான கொலாஞ்செலோவை விடுவித்து விட்டனர். கடத்தப்பட்ட இத்தாலி சுற்றுலாப்பயணியையும், எம்.எல்.ஏ.வையும் பத்திரமாக மீட்க ஒடிசா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடத்தல்காரர்களின் தூதுக்குழுவினருடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிறைகளில் உள்ள மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை முக்கிய இடம் பெற்றது.
இந்தநிலையில் சிறையில் இருந்து விடுதலை செய்யவுள்ள 27 பேரின் பட்டியலை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மாநில சட்டசபையில் அறிவித்தார். இத்தாலி சுற்றுலாப்பயணியை கடத்தியுள்ள மாவோயிஸ்டுகள் ஒடிசா அரசின் உத்தேச கைதிகள் விடுதலைப்பட்டியலை ஏற்கவில்லை.
இதுதொடர்பாக ஒடிசா மாநில மாவோயிஸ்டு அமைப்புச் செயலாளர் சப்யாசாச்சி பாண்டா குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு ஒரு ஆடியோ கேசட்டை நேற்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இத்தாலி சுற்றுலாப்பயணி போசுஸ்கோவை விடுவிப்பதற்கு அரசு விடுதலை செய்யவுள்ள சிறைவாசிகளின் பட்டியல் ஏற்கத்தக்கது அல்ல. மாவோயிஸ்டுகளால் நியமிக்கப்பட்ட தூதுக்குழுவினர் பி.டி. சர்மா, தண்டபாணி மொஹந்தி ஆகியோருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பு நாடகம்.
நவீன்பட்நாயக் அரசு தாமத தந்திர உத்தியை பின்பற்றி வருகிறது. பொசுஸ்கோ விடுதலை தொடர்பாக விதிக்கப்பட்ட 13 நிபந்தனைகள் பற்றி உறுதியான முடிவு எடுக்கப்பட வில்லை. அரசு வெளியிட்டுள்ள உத்தேச கைதிகள் விடுதலைப்பட்டியலில் நாங்கள் விடுவிக்குமாறு கோரியவர்களில் பலரது பெயர்கள் இல்லை. (அரசின் விடுதலைப்பட்டியலில் இடம் பெற்றுள்ள) எனது மனைவி சுபஸ்ரீ என்ற மிலிபாண்டா உள்பட 7 பேரை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமான உடன்படிக்கைக்கு அரசு உடன்பட வேண்டும். அரசுக்கு 96 மணி நேரம் (4 நாட்கள்) இறுதி கெடு விதிக்கப்படுகிறது. அதற்குள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொசுஸ்கோ உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலி சுற்றுலாப் பயணி விடுதலைக்கு மாவோயிஸ்டுகள் இறுதிக்கெடு விதித்து இருப்பது, அந்த நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுகுறித்த தகவல் வெளியான சில மணி நேரத்தில் ஒடிசா அரசின் தலைமைச்செயலாளர் பி.கே. பட்நாயக்கை இத்தாலி தூதர் கியாகோமா சான்பெலிசே டி மாண்டிபோர்ட்டே சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக தலைமைச்செயலாளர் பி.கே. பட்நாயக், உள்துறை செயலாளர் யு.என் பெஹரா ஆகியோர் கூறும்போது, மாவோயிஸ்டு தலைவர் சப்யாசாச்சி பாண்டாவின் புதிய நிபந்தனை குறித்து அரசு பரிசீலிக்கிறது என்றனர்.
இது ஒருபுறமிருக்க ஆந்திரா-ஒடிசா எல்லை சிறப்பு மண்டல கமிட்டியை சேர்ந்த மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதேநேரத்தில் அவரது விடுதலை தொடர்பாக நேற்று அரசு உள்துறை செயலாளர் யு.என்.பெஹராவுடன் பேச்சு வார்த்தை நடத்திய தூதுக்குழுவினர் பி.டி. சர்மா, தண்டபாணி மொஹந்தி ஆகியோர் இது தொடர்பாக கூறும்போது, சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வழிவகை செய்யப்படும் என கூறுகின்றனர்.
ஆனால் வழிவகை செய்தல் என்பதற்கான அர்த்தம் எங்களுக்கு விளங்கவில்லை. கைதிகளை எப்போது, எப்படி விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றனர்.
இதற்கிடையே எம்.எல்.ஏ. விடுதலை தொடர்பாக ஒடிசா அரசு நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு இன்று (சனிக்கிழமை) வரை கெடுவை நீட்டித்திருப்பதாக சில ஊடகங்களுக்கு மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் போனில் தகவல் தெரிவித்தார்.
இந்தநிலையில், கைதிகளை விடுவித்து, பணயக்கைதிகளாக உள்ள இத்தாலி சுற்றுலாப்பயணி மற்றும் எம்.எல்.ஏ.வை ஒடிசா அரசு மீட்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment