Saturday, April 14, 2012

சுஷ்மா சுவராஜ் தலைமையில்: நாளை மறுநாள் இலங்கை செல்கிறது இந்திய எம்.பி.க்கள் குழு!

Saturday, April, 14, 2012
புதுடெல்லி::சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கையில் நாளை மறுநாள் முதல் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். அவர்கள்,
தமிழர் பகுதிகளை பார்வையிடுகிறார்கள். இலங்கைக்கு இந்திய எம்.பி.க்கள் குழுவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த குழுவின் தலைவராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில், காங்கிரசை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க தாகூர்,
எம்.கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி.சித்தன், திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், பாஜவை சேர்ந்த பிரகலாத் ஜோஷி, சி.பி.தாகூர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த எம்.பி.க்கள் குழு நாளை மறுநாள் இலங்கைக்கு செல்கின்றனர். அங்கு வரும் 21ம் தேதி வரை 5 நாட்கள் அவர்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளை எம்.பி.க்கள் சந்தித்து பேசுவார்கள். போரினால் பாதிக்கப்பட்ட யாழ்பாணம், கிளிநொச்சியை அவர்கள் பார்வையிட உள்ளனர். தமிழர் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள மறு சீரமைப்பு பணிகள் மற்றும் அங்கு தமிழர்கள் மீண்டும் குடியேற்றப்பட்டுள்ளது பற்றியும் அவர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். தமிழர்கள் மற்றும் தமிழர் கட்சி தலைவர்களையும் எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்.

No comments:

Post a Comment