Pages

Saturday, April 7, 2012

இலங்கையில் தமிழ், சிங்கள உறவை சிதைக்க அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தலைமையில் சர்வதேசம் செயற்படுகின்றது - சம்பிக்க ரணவக்க!

Friday, April, 06, 2012
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியோ ஜெனீவா தீர்மானங்களுக்கு அடிபணிந்தோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.இலங்கையில் தமிழ், சிங்கள உறவை சிதைக்க அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தலைமையில் சர்வதேசம் செயற்படுகின்றது.

எனவே, நாட்டிற்கு எதிரான சர்வதேசத்தின் சூழ்ச்சிகளுக்கு பின்னணியில் உள்நாட்டு துரோகிகள் பலரும் உள்ளனர்.

அதேபோன்று சம்பந்தன் குழுவினர் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும். சர்வதேசத்திடம் கோள் சொல்வதால் எவ்விதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்றாவது தமிழ் சிங்கள புத்தாண்டை இலங்கையில் ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர்.

தற்போது நாட்டில் காணப்படும் நிலையான சமாதானம் மற்றும் சுதந்திரம் என்பவற்றை சீரழிக்க சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன. இதன் மூல சூத்திரதாரிகளாக அமெரிக்காவும் இந்தியாவுமே உள்ளன.

போலியான போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை காரணங் காட்டி அமெரிக்கா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுகின்றது.

ஜெனீவா பிரேரணையின் பின்னணியில் இலங்கையை பழிவாங்கும் நோக்கமே உள்ளது. எனவே மண்டியிட்டு சாவதை விட சண்டையிட்டு மடிவதே மேல். இதற்கு மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் உள்நாட்டில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர். அவர்களின் கலாசாரம் மற்றும் மரபுமைகள் என அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன.

இதற்காக அரசாங்கம் மிகவும் பங்களிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தமிழ் மக்களை புறம்தள்ளி விடவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஆனால் தமிழ் சிங்கள ஒற்றுமையை சீரழிக்க பாரியளவில் முன்னெடுப்புக்களை அந்நிய சக்திகள் மேற்கொள்கின்றன. இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment