Pages

Wednesday, April 4, 2012

தமிழகத்தில் புலிகள் இல்லவே இல்லை: ப.சிதம்பரம்!

Wednesday,April,04,2012
புதுடெல்லி::தமிழகத்தில் புலிகள் முகாம் அமைத்திருப்பதாக இலங்கைப் பத்திரிக்கையில் கூறப்பட்டிருப்பது முற்றிலும் ஆதாரமற்ற தகவல். தமிழ்நாடு உள்பட இந்தியாவில் எங்குமே அதுபோன்ற பயிற்சி முகாம்கள் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் புலிகளுக்கு 3 பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 150 போராளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இவர்கள் மீ்னவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாகவும் அந்த நாட்டு சிங்களப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியை உடனடியாக தமிழக டிஜிபி, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியோர் மறுத்திருந்தனர். இதுகுறித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல். தமிழ்நாடு உள்பட இந்தியாவில் எங்குமே அதுபோன்ற பயிற்சி முகாம்கள் இல்லை என்றார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் மற்றும் மீனவர்களால் நடுக்கடலில் தாக்கப்படுவது குறித்த கேள்விக்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில்,

இந்த பிரச்சினை குறித்து இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயும், இரு நாட்டு மீனவர்கள் பிரதிநிதிகள் இடையேயும் இரு கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசும் தொடர்பில் இருந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரைவு ஒப்பந்தம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு மீனவர்களே தீர்வு காண்பது என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும்.

மேலும் அந்த ஒப்பந்தப்படி இந்திய மீனவர்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இலங்கை கடற்கரை வரை செல்லலாம். ஆனால், ஒரு சில அம்சங்கள் குறித்து இலங்கை அரசால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த தடைகளைத் தாண்டி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment