Friday, April 13, 2012

புதுவாழ்வு பூக்கட்டும் புதுவருட வாழ்த்துச் செய்தி: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April, 13, 2012
இலங்கை::பிறக்கும் புத்தாண்டின் வரவில் சகல மக்களும் சகல உரிமைகளும் பெற்று இன்னமும் நிமிர்வு பெறும் புது வாழ்வு பூக்கட்டும் என்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில், இனங்களுக்கிடையில் வளர்க்கப்பட்ட அர்த்தமற்ற பகை முரண்பாடுகள் ஒட்டு மொத்த இலங்கைத்தீவையும் இருண்டதொரு யுகத்தினுள் தள்ளி விட்ட கடந்த காலத்துயர்களில் இருந்து மீண்டெழும் காலம் இப்போது கனிந்திருக்கிறது.

வலிகளும், வதைகளும் தந்து, அழிந்தொழிந்த வாழ்வில் இருந்து மீண்டெழுந்த எமது மக்கள் உரிமைகள் பெற்று நிமிர்வதற்கு இனங்களுக்கிடையிலான சமத்துவ ஐக்கியமே இனி நாம் வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய எமது வரலாற்றுக்கடமை.

தமிழ், சிங்கள மக்கள் கொண்டாடி மகிழும் சித்திரைப்புத்தாண்டு இரு இன சமூக மக்களையும் சேர்த்து வைப்பதைப்போல், சகல மக்களும் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளை பகிர்ந்து அனுபவிக்க முடிந்த காலச்சூழலுக்கான உடன்பாடுகளும் இங்கு பூரணமாக கனிய வேண்டும்.

இவைகளுக்காக நாம் எடுத்த முயற்சிகளும், வகுத்த வழிமுறைகளும் நடைமுறைச்சாத்தியமானவை என்பதால் அவை தோற்றுப்போகாமலே தொடர்கின்றன.

தூற்றல்கள் எம்மீது தொடர்ந்தாலும் எமது மக்களை ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக வாழ வைக்கும் ஆற்றல் மிக்க எம் பணிகள் தொடரும்.

அழிந்து, சிதைந்து போன எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தும் எமது தேச இலட்சியப்பணிகளை தொடர்ந்தும் நாம் முழுமையாக முன்னெடுப்போம்.

மானிட வாழ்வின் மகத்தான மனித விருப்பங்கள் ஈடேற, இல்லாமை என்பது இல்லாதொழிக்கப்பட்டு வறுமையும், உயர்வு தாழ்வுமற்ற புதிய சமூகத்தின் வருகைக்காக எமது அரசியல் அதிகாரங்களை மேலும் பெற்று தொடர்ந்தும் நாம் உழைப்போம்.

இவைகளே பிறக்கின்ற புத்தாண்டில் எமது மக்களுக்கு நாம் வழங்கும் உண்மையானதும், நேர்மையானதும், நடைமுறைக்கு சாத்தியப்படுத்த முடிந்ததுமான நம்பிக்கை தரும் செய்தியாகும்.

எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் சிறக்கவும், இன, சமத்துவ ஐக்கியத்தின் மூலம் உரிமைகள் பிறக்கவும் நம்பிக்கையுடன் சேர்ந்துழைக்க சகல மக்களும் இன்னமும் உறுதியோடு உழைக்க முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டக்ளஸ் தேவானந்தா,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர், நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்.

No comments:

Post a Comment