Thursday, April 05, 2012சென்னை::கோவில் திருவிழாக்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து நடத்தப்படும் ரெக்கார்டு டான்ஸ், காபரே டான்ஸ் போன்ற வெறுக்கத்தக்க நடனங்களை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள திண்டமங்கலத்தைச் சேர்ந்த எம்.பழனிச்சாமி உள்பட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில், எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. வழக்கமாக கோவிலில் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் ஏப்ரல் 4-ம் தேதி கிராமிய நாட்டிய நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு போலீஸார் இடையூறு செய்கின்றனர். எனவே இந்த நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும், கோவில் நிகழ்ச்சிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனுக்களை நீதிபதி கே.சந்துரு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் குறிப்பிடும் நடனம், இந்திய கலாசார நடனமா என்பதை விளக்கமாக கூறவில்லை. இந்திய கலாசார நடனங்கள் பல உள்ளன. ஆனால் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் அரை நிர்வாணம் மற்றும் ஆபாச நடனங்கள் நடப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் பல வருகிறது. அதற்கு ஒருபக்கத்தில் எதிர்ப்புகளும் கிளம்புகின்றன.
ஆபாச பாடல்களுக்கு ஏற்றபடி உடலை ஆட்டி பெண்கள் ஆடுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த சட்ட அங்கீகாரம் இல்லை. இப்படிப்பட்ட நடனத்துக்கு அனுமதி கேட்டு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை நாடியது துரதிருஷ்டவசமானது. இந்த நிகழ்ச்சியை இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சி என கூறிவிட முடியாது.
தனி அரங்கங்களில் நடனங்களை நடத்துவதற்கு வேண்டுமானால் அனுமதி பெறலாம். ஆனால் பொது இடங்களில் ஆபாச நடனங்களையோ, நிகழ்ச்சியையோ நடத்த யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. விநாயகர் சிலைகளை கரைப்பதை மத நம்பிக்கையாக எடுத்துக்கொண்டாலும், சிலைகள் ஊர்வலம் பாதையை அவர்களே தேர்வு செய்ய முடியாது.
மத நடவடிக்கைகளை இந்திய அரசியல் சாசனம் அங்கீகரிக்கிறது. இதுபோன்ற ஆபாச நடனத்தை அல்ல. மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த யாரும் அனுமதி மறுக்கவில்லை. அந்த ஆன்மிக நிகழ்ச்சியில், ஆபாச நடனத்தை நடத்துவதற்குத்தான் அனுமதி மறுக்கப்படுகிறது. மத உரிமைகள் மறுக்கப்படவில்லை.
ஆபாச நடனம் நடத்துவதை தடுப்பதற்கு போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளனர். `ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பெண் உருவில் மாரியம்மனை கடவுளாக மக்கள் வழிப்படுகின்றனர். ஆனால் அந்த பெண் கடவுளுக்கும் முன்பாகவே பெண்களை ஆபாசமாக சித்தரித்து நடத்தப்படும் ரெக்கார்டு டான்ஸ், காபரே டான்ஸ் போன்ற வெறுக்கத்தக்க நடனங்களை அனுமதிக்க முடியாது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment