Pages

Saturday, April 7, 2012

அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான உறவு எப்போதும் சீராக இல்லை!

Friday, April, 06, 2012
புதுடெல்லி::அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான உறவு எப்போதும் சீரானதாக இல்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கவலை தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தலைநகர் டெல்லியை நோக்கி ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் முன்னேறியதாக ஆங்கில ஏடு ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங் தனது வயது பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் ராணுவம் இவ்வாறு முன்னேறியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் ராணுவப் புரட்சிக்கு முயற்சி நடந்ததா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த ஐயப்பாட்டை பிரதமர் மன்மோகன்சிங் மறுத்தார். ராணுவ புரட்சி முயற்சி நடைபெறவில்லை என்று மன்மோகன்சிங் திட்டவட்டமாக மறுத்தார். அதேநேரம் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் ராணுவத்தின் மீது சேற்றைவாரி இறைக்க முயற்சிகள் நடக்கின்றன என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட சூழலில் பா.ஜ.க.மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி இதுகுறித்து நேற்று தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராணுவத்துக்கும் அரசுக்கும் இடையேயான உறவு எப்போதுமே சீரானதாக இருந்ததில்லை. அது குறைவாகவே உள்ளது. நம்பிக்கை பற்றாக்குறை என்பது எல்லாமட்டங்களிலும் உள்ளது. ஏப்ரல் 4 ம் தேதி வெளிவந்த செய்தியையும் அதையடுத்து வந்த பல்வேறு கதைகளையும் படிக்கும்போது இவையெல்லாம் மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. ராணுவம் அரசின் உறவு சீராக இல்லை என்று பா.ஜ.க. கூறியதை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வாறு அத்வானி கூறினார். அரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் இருந்து காலாட்படை ஒன்று டெல்லி நோக்கி நகர்ந்தது. அதேபோல ஆக்ராவில் இருந்து ராணுவத்தின் மற்றொரு பிரிவு ஜனவரி மாத மத்தியில் டெல்லி நோக்கி நகர்ந்ததாம். இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மற்றொரு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது போர் வெடித்தால் இந்தியாவிடம் உள்ள வெடிபொருட்கள் பத்து நாளைக்குக்கூட போதாது என்ற தகவல்தான் அது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ராணுவம் பலவீனமாக இருப்பதை பல்வேறு தகவல்கள் சுட்டிக்காட்டியவண்ணம் உள்ளன. இந்த சூழலில் சீனாவும் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துப் பார்க்கிறது. இதுவும் கவலை அளிக்கும் ஒரு விஷயமாகும். இவற்றுக்கெல்லாம் மத்திய அரசுதான் தெளிவான ஒரு விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment