Pages

Sunday, April 8, 2012

காணாமல் போயுள்ள இருவர் தொடர்பில் மேலும் முறைப்பாடுகள்!

Sunday, April, 08, 2012
இலங்கை::மக்கள் போராட்ட இயக்கத்தின் இரண்டு செயற்பாட்டாளர்கள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு மேலும் இரு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அத்துறுகிரிய மற்றும் கோட்டே ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் திமுது ஆட்டிகல காணாமல்போயுள்ளமை தொடர்பில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான குமார் குணரத்தனம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்திற்கும் பொலிஸ் தலைமையகத்திற்கும் இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.....

கடத்தப்படுதல் சட்டத்தின் உத்தியோகபற்றற பகுதி - ஜே.வி.பி.!

மக்கள் கிளர்ச்சி அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இரண்டு பேர் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற சில செய்தியாளர் சந்திப்புகளில் பலவித கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்கள் கிளர்ச்சி அமைப்பு தலைமையிலான சில கட்சிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் அரசியல் துறை செயலாளர் புபுது ஜயகொட கருத்து வெளியிட்டிருந்தார்.

காணாமல் போன தமது கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கொள்கையுடன் அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ள நபர்களை ஒழிப்பதை தவிர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் முனைய வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.

இதேவேளை, ஆட்கடத்தலானது சட்டத்தின் உத்தியோகபற்றற்ற பகுதியாக மாறிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்..

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 29 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

தங்களுடன் இணங்காத அரசியல் செயல்பாட்டாளர்கள், தமக்கு ஏற்புடையதல்லாத பாதள உலகக்குழுவினர், தமக்கு பங்கு வழங்காத போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் சுதந்திர கொள்கை உடையவர்கள் என பலரும் இவ்வாறு கடத்தப்படுவதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை வான் கலாசாரம் நாட்டில் சட்டமாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டதுடன், அது தொடர்பில் கைது செய்தல் சட்டத்தின் முன் நிறுத்தல் போன்றவை செயற்பாட்டில் இல்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த சட்டவிரோத செயல் மற்றும் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை நிறுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, மக்கள் கிளர்ச்சி அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவரின் காணாமல் போதல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்தில் நாட்டை அபகீர்த்தி மற்றும் அவதூறுக்கு உள்ளாக்கும் இவ்வாறான கடத்தல்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுமக்களுக்கு அச்சமின்றி, பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கமைய விசேட காவல்துறை குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment