Pages

Tuesday, April 3, 2012

லஷ்கர் ஏ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதின் தலைக்கு 10 மில்லியன் டாலர்: அமெரிக்கா!

Tuesday, April, 03, 2012
வாஷிங்டன்::மும்பை தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீதின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர்களை பரிசாக அறிவித்துள்ளது.

இப்போது ஜமாத் உத் தாவா என்ற அமைப்பின் தலைவராக உள்ள ஹபீஸ் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவர் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்தை நிறுவியவர்களுள் முக்கியமானவர் ஆவார். இவர் பாகிஸ்தானில் மிக சுதந்திரமாக இயங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந் நாட்டில் பல பொதுக் கூட்டங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். ஆனாலும் இவரைப் பிடிக்க அமெரிக்கா இதுவரை தீவிர நடவடிக்கை எதிலும் இறங்கவில்லை.

இந் நிலையில், இவரது தலைக்கு 10 மில்லியன் டாலரை அமெரிக்கா பரிசாக அறிவித்துள்ளது. இவரைப் பிடித்துத் தந்தாலோ அல்லது இவர் இருக்கும் இடம் குறித்து தகவல் தந்தாலோ இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அமெரிக்கன் சென்டரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் வென்டி ஷெர்மன் இதைத் தெரிவித்தார்.

இதன்மூலம் ஹபீஸ் சயீதை கைது செய்ய வேண்டிய அல்லது அவர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து முடக்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் அரசு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேடப்படும் மிக முக்கிய தீவிரவாதிகள் பட்டியலில் உள்ள சயீத், கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் இவரை பாகிஸ்தான் சுதந்திரமாகவே நடமாட விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரைக் கைது செய்யுமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை பாகிஸ்தான் இதுவரை ஏற்காமல் இருந்து வருகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களைத் தருமாறு பாகிஸ்தான் கோரி வருகிறது. இந் நிலையில் தான் அமெரிக்கா மூலமாக இப்போது இந்த புதிய நெருக்கடி ஆரம்பித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் இவர் நடத்திய பல பேரணிகளில் பாகிஸ்தான் அமைச்சர்களே பங்கேற்றுள்ளனர் என்பதும் இவர் அந் நாட்டு ராணுவத்தும் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் மிக நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலிபான் தலைவர் முல்லா ஒமரின் தலைக்கும் இதே 10 மில்லியன் டாலரைத் தான் அறிவித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. அல் கொய்தா தலைவரான அய்மான் அல் ஜவாகிரியின் தலைக்குத் தான் மிக அதிகபட்சமாக 25 மில்லியன் டாலர்களை நிர்ணயித்துள்ளது அமெரிக்கா.

No comments:

Post a Comment