Friday, March 23, 2012

நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறுத்தம் மாப்பிள்ளையால் ஆத்திரம் அடைந்த இரு வீட்டாரும் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் மோதல்!

Friday, March 23, 2012
தாம்பரம்::நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் நடவடிக்கை சரியில்லை என கூறி பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆனால், கோயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி தாம்பரம் போலீசில் தஞ்சம் அடைந்தது. ஆத்திரம் அடைந்த இரு வீட்டாரும் போலீஸ் நிலையத்தில் மோதி கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியா. இவர்களது மகள் சில்லியா (19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படிக்கிறார். சில்லியாவுக்கும் சென்னை கோடம்பாக்கம் புலியூர்புரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த வடிவேலு மகன் அரிகிருஷ்ணனுக்கும் (28) கடந்த ஆண்டு மே 18ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. சில்லியாவின் படிப்பு முடிந்தவுடன் வரும் மே மாதம் 6ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நிச்சயித்த பின் சில்லியாஅரிகிருஷ்ணன் அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் அரிகிருஷ்ணன் சுற்றுவதாகவும், நிச்சயித்த திருமணம் நடக்காது என்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கு சில்லியாவின் பெற்றோர் தெரியப்படுத்தினர். ஆவேசம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி 31ம் தேதி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் செய்தனர். இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சு நடத்தியும் சுமுக முடிவு கிடைக்கவில்லை.

மோதல் ஒருபுறம் நடக்க சில்லியாஅரிகிருஷ்ணன் ஜோடி, பாரிமுனையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பதிவு திருமணமும் செய்து கொண்டு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வக்கீல் ஒருவர் மூலம் நேற்று மாலை தஞ்சம் அடைந்தனர். இரு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து போலீசார் வரவழைத்தனர். பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே இரு தரப்பினருக்கும் திடீரென கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்களை போலீசார் விலக்கி விட்டனர்.ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார், ‘எங்களுக்கு பெண் வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டனர். சில்லியாவுடன் அரிகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment