Sunday, March 25, 2012இலங்கை::இலங்கையின் பொருளாதார செயற்திட்டங்களின் போது இந்தியாவுக்கு தேவையற்ற சலுகைகளை அளித்து அந்நாட்டுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது என்று ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கும் கட்சி, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை அரசு பொருளாதார மற்றும் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுக்கும்போது இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டே செயற்பட்டதாகவும் ஹெல உறுமய தலைவர் கூறினார்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது, இந்தியா மீது இலங்கை வைத்திருந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் ஹெல உறுமய கட்சி கூறுகிறது.
நாட்டின் ஒருமைப்பாட்டை பிளவுபடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாகவும் ஹெல உறுமய தலைவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றக் கட்டமைப்பொன்றை அமைக்க வேண்டும் என்பது ஜாதிக ஹெல உறுமயவின் கருத்து.
அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னரான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க கூறினார்.
No comments:
Post a Comment