Sunday, February 05, 2012சென்னை:தமிழக சட்டசபையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம், அவர் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், முதல்வரை விமர்சித்ததாக, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில், சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஒருவர் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி, ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த, அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு ஒன்றிய தலைவரும், வழக்கறிஞருமான ஞானமுத்து மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர், நேற்று பிற்பகல் கோயம்பேடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, சட்டசபையில் முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், சபாநாயகர் ஜெயக்குமார், விஜயகாந்தை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், விஜயகாந்த், கட்சி அலுவலகத்திற்கு வந்து அனைத்து "டிவி' மற்றும் பத்திரிகை நிருபர்களை அழைத்து, தன் ஆதரவாளர்கள் முன்னிலையில், தமிழக முதல்வர் ஆட்சிக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பேட்டியளித்தார்.
அதில், தமிழக முதல்வரின் பெயரை கூறி, அருவருக்கத்தக்க வகையில், முதல்வரை அவமதிக்கும் வகையில், பொதுமக்களிடையே வதந்தி பரப்பும் உள்நோக்கத்துடன், உயர் பதவியில் இருப்பவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன், தவறான செய்தியை பிறர் மனதை புண்படுத்தும் அளவிற்கு, நிருபர்களிடம் பேட்டியளித்தார். எனவே, விஜயகாந்த் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்!
சென்னை::எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த கால கட்டங்களில், அரசு சலுகைகள் எதையும் அனுபவிக்க முடியாது என, சபாநாயகர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்காக, தமிழக அரசு வழங்கிய, "இன்னோவா'(பதிவு எண்: டி.என்.04-பிஜி7007) காரை, நேற்று அரசிடம், விஜயகாந்த் ஒப்படைத்தார். இவரின் நேர்முக உதவியாளர் பார்த்தசாரதி, டிரைவருடன் நேற்று பகல் 12.35க்கு, தலைமைச் செயலகம் வந்தார். சட்டசபை துணைச் செயலரை சந்தித்து, கார் சாவியை ஒப்படைத்தார்.இது குறித்து, பார்த்தசாரதி கூறும்போது,""அரசு காரை ஒப்படைக்க வேண்டும் என, சட்டசபை செயலர் ஜமாலுதீன், எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்துடன், துணைச் செயலரை சந்தித்து, அவரிடம் கார் சாவியை கொடுத்தேன். காரை பெற்றுக்கொண்டதற்கான கடிதத்தை, அவர் என்னிடம் வழங்கினார்'' என்றார்.
No comments:
Post a Comment