Saturday, February 11, 2012

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதன் பின்னணி என்ன?.

Saturday, February 11, 2012
சென்னை::இலங்கையில் புலிகள், ராணுவத்திற்கு இடையிலான போர் முடிந்து, மூன்றாண்டுகள் ஆகி விட்டன. இந்தியாவின் நிதியுதவியோடு, வீடிழந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு குறிப்பாக, வட மாகாணத்தில் நிலைமை எவ்விதம் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, இலங்கை மத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில், சென்னையில் இருந்து பத்திரிகையாளர்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.

மீனவர்களுடன் சந்திப்பு: வடமாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சென்னை பத்திரிகையாளர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில், யாழ்ப்பாணத்தின் வடபகுதியில் உள்ள வல்வெட்டித் துறை, மாதகல் ஆகிய இரு இடங்களிலும், மீனவர்கள் உடனான சந்திப்பு நடந்தது. இந்திய, இலங்கை உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும் முக்கிய விவகாரங்களில், மீனவர் பிரச்னையும் ஒன்று. சமீபத்தில், இலங்கை சென்றிருந்த மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர், இப்பிரச்னையில் குறிப்பிடத்தக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதோடு, இரு நாடுகளையும் சேர்ந்த மீன்பிடி தொழிலுக்கான கூட்டு நடவடிக்கைக் குழு, கடந்த ஜனவரியில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், மீனவர் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுப்பது குறித்து ஆராய்ந்தது.

பல்வேறு ஆலோசனைகள்: இதன் அடிப்படையில், கடலில் குறிப்பிட்ட சில பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மட்டுமே அந்தந்த நாடுகளின் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதன் மூலம், மீனவர்கள் மீது தாக்குதல், கைது போன்ற பிரச்னைகளைக் களைய முடியும் என, அக்குழு எதிர்பார்க்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியதாக இருப்பதால், கடல் எல்லை என்பது சில கடல் மைல் தொலைவிலேயே வந்து விடும். அதனால், மீனவர்கள் மீன் பிடிக்க, எல்லை மீற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்ற வாதம், இப்பிரச்னையில் முன்வைக்கப்படுகிறது.

நிலவரம் என்ன? ஆனால், வல்வெட்டித் துறையில் நடந்த மீனவர்கள் சந்திப்பின் போது நிலவரம் வேறு விதத்தில் இருப்பதை உணர முடிந்தது. தங்களுக்குக் கடல் எல்லை ஒரு பிரச்னையே இல்லை என்பதை, அவர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினர்.

குற்றச்சாட்டு: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இழுவைப் படகு, இரட்டை மடி வலை போன்றவற்றைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்கள் கடல் வளங்களை அழிப்பதையே அவர்கள் குற்றம்சாட்டினர். அதோடு, தமிழக மீனவர்கள் இழுவைப் படகு பயன்படுத்துவதன் அரசியல் பின்னணியையும், அவர்கள் சுட்டிக் காட்டினர். இந்த விவகாரம் குறித்து, யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டமைப்புகளின் சம்மேளனம் மற்றும் வடமாகாண கடல் தொழிலாளர் கூட்டமைப்புகளின் சம்மேளனம், கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த, எஸ்.தவரத்தினம், அருள் தாஸ், சூரிய குமார், சந்திரஹாசன் ஆகிய மீனவர் பிரதிநிதிகள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களை எங்கள் உறவுகளாகத் தான் மதிக்கிறோம். அவர்கள் இங்கு சிறைபட்டால் கூட, அவர்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளையும் செய்து, அவர்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுகிறோம்.

1960களில்...: இந்த விவகாரத்தில், கடல் எல்லை என்பது ஒரு பெரிய பிரச்னையே அல்ல. 1960கள் வரை, இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லைகளைத் தாண்டி வந்துதான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. காரணம், அப்போது அவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தியதில்லை. ஆனால், 1970க்கு முன்பே இழுவைப் படகுகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தத் துவங்கினர்.

தடை செய்யப்பட்ட படகுகள்: போர்க் காலகட்டத்தில், கடலுக்குள் செல்ல முடியாதபடி, ராணுவத் தடைகள் இருந்தன. அக்காலகட்டத்தை தமிழக மீனவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். 2009ல் போர் முடிந்த பின், நாங்கள் மீண்டும் மீன்பிடி தொழிலைத் துவக்கிய போது தான் இப்பிரச்னை தலையெடுத்தது. இழுவைப் படகுகள், இரட்டை மடி வலைகள், தங்கூசி வலைகள் போன்றவை, கடல் வளங்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பதால், அவை இந்தியா மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் பயன்படுத்துவதில்லை.

பின்னணி என்ன? இதே நிலைப்பாட்டை தமிழக மீனவர்களும் மேற்கொண்டால், இப்பிரச்னை சுலபத்தில் தீர்ந்து விடும். ஆனால், பிரச்னையைத் தீர்க்கவிடாமல் தடுப்பவர்கள், தமிழகத்தில் உள்ள கோடீஸ்வர பணக்கார மீனவர்கள் தான். அவர்கள் 40 லட்ச ரூபாய் செலவில், இழுவைப் படகையும், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான இரட்டை மடி வலையையும் வாங்கி, அதைப் பயன்படுத்தும்படி, சாதாரண மீனவர்களை நிர்பந்திக்கின்றனர். அவர்களும் வேறு வழியின்றி அத்துமீறுகின்றனர். தமிழக கடற்பகுதியில் இந்தப் படகுகள், கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுவதால், அங்கிருந்த கடல் வளங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. அதனால், தமிழக மீனவர்கள் தற்போது இலங்கைக் கடல் வளங்களைக் குறிவைத்து அத்துமீறுகின்றனர். இந்தக் கடல் வளங்கள் தான் எங்கள் ஆதாரம். இவையும் அழிந்து விட்டால், நாங்கள் எங்கே செல்வோம்?

எந்தெந்த மீனவர்கள்? வல்வெட்டித்துறை உள்ளிட்ட வடமராட்சிப் பகுதியில், மொத்தம் மூவாயிரத்து 500 குடும்பங்கள் இந்த மீன்பிடித் தொழிலை நம்பித்தான் வாழ்கின்றன. வல்வெட்டித்துறை கடற்பகுதியில் பெரும்பாலும் நாகப்பட்டினம், ஜகதாபட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தான் அத்துமீறி உள்நுழைகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள், மன்னார் பகுதியில் அத்துமீறி வருகின்றனர்.

மூன்றே ஆண்டுகளில்...: நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் உருவாகி வந்த இந்த வளங்கள், சில மாதங்களில் சுவடே தெரியாமல் இழுவைப் படகுகள் மூலம் அழிக்கப்பட்டு விடுகின்றன. இதற்கு முன் காணப்பட்ட அரிய வகை மீன் இனங்கள், தற்போது அழிந்துவிட்டன.இந்த நிலைமை இப்படியே நீடித்தால், மூன்றே ஆண்டுகளில் இலங்கை கடற்பகுதியில் உள்ள அனைத்து வளங்களும் அழிந்து போய் விடும். இதுகுறித்து, பலமுறை பேச்சு நடந்துள்ளது. எனினும், இப்பிரச்னைக்கு எவ்வித தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. இப்பிரச்னைக்கு இனி, இருதரப்பு அரசுகளும் தான் சரியான தீர்வு காண வேண்டும். அதன் மூலம், கடல் வளங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு, வல்வெட்டித்துறை மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதே கருத்தையே இலங்கை அமைச்Œர் டக்ளஸ் தேவானந்தாவும் வலியுறுத்தினார்.


இலங்கை தமிழ் மீனவர்கள் விளக்கம்


பிரச்னையும் தீர்வும்

* அதிவேகத்தில் செல்லக் கூடிய இழுவைப் படகுகளை, தமிழக மீனவர்கள் பயன்படுத்துகின்றனர். அதோடு, இரட்டை மடி வலைகளையும் வீசுகின்றனர். இவை, கடல் வளங்களை முற்றிலும் அழித்து விடுகின்றன. இதுதான் பிரச்னையின் அடித்தளம்.

* தற்போது தமிழக கடல் எல்லையில் வளங்கள் இல்லாததால், அவற்றைத் தேடி, தமிழக மீனவர்கள் அத்துமீறுவதாக, இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


* இழுவைப் படகு, இரட்டை மடி வலை ஆகியவற்றைப் பயன்படுத்துவதை, தமிழக மீனவர்கள் கைவிட வேண்டும்.

* அப்படிக் கைவிடும்பட்சத்தில், எல்லை தாண்டுதல் என்பது பிரச்னையே இல்லை.

* தமிழக மீனவர்களுக்கு மாற்றுத் தொழில், அதாவது ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்றவை பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

* இதன் மூலம், அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடி தொழிலை பிரச்னையின்றி நடத்த முடியும். தற்போது, இலங்கையை ஒட்டிய சர்வதேச கடற்பகுதியில் அண்டை நாட்டு மீனவர்கள் வந்து மீன் பிடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இரு நாட்டு அரசுகளும், பாக்., நீரிணையில் உள்ள கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம், மிச்சமிருக்கும் மீன் இனங்களையாவது காப்பாற்ற முடியும்.

No comments:

Post a Comment