Thursday, February 9, 2012

முல்லை பெரியாறில் கண்காணிப்பு கருவி பொருத்த தடை : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

Thursday, February 09, 2012
சென்னை::பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை கண்காணித்து உடனுக்குடன் தெரிவிக்கும் கருவியை நிறுவ தன்னிச்சையாக கேரள அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. எனது முந்தைய கடிதங்களில் குறிப்பிட்டதுபோல கேரள அரசு தொடர்ந்து முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அணை பாதுகாப்பாக இருப்பதாக 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பிறகே இத்தகைய செயல்களில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறது. இந்நிலையில், தற்போது கண்காணிப்பு கருவியை பொருத்த நடவடிக்கை எடுத்து வருவது அச்ச உணர்வை அதிகரிக்க கேரள அரசு எடுக்கும் மற்றொரு முயற்சியாகும்.

முல்லை பெரியாறு அணை, தமிழக அரசுக்கு சொந்தமாகும். இந்த அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது. இப்போது தன்னிச்சையாக, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்துடன் சேர்ந்து கண்காணிப்பு கருவி அமைக்க முயற்சிப்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமான செயலாகும். கண்காணிப்பு கருவி பொருத்துவது தொடர்பாக கேரள அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தின் உரிமைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என மத்திய அமைச்சகத்துக்கும் கேரள அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

கடந்த டிசம்பர் மாதம் எழுதிய கடிதத்தில் முல்லை பெரியாறு அணைக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியிருந்தேன். கேரள அரசு, தற்போது தன்னிச்சையாக அணை நிர்வாகத்தில் தலையிட முயற்சிப்பது, அணையின் பாதுகாப்பை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இவ்வாறு கடிதத்தில் முதல்வர் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment